Skip to main content

சாராயம் கடத்தல்... தகவல் சொன்ன இளைஞருக்கு டி.எஸ்.பி. அலுவலக ஏட்டு மிரட்டல்... பரபரக்கும் ஆடியோ 

Published on 12/09/2019 | Edited on 12/09/2019

 

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்ட தும்பேரி அண்ணாநகர் பகுதி இளைஞர் ஒருவர், சார் டி.எஸ்.பி. சாரிடம் பேசனும் எனக் கேட்கிறார். அதற்கு எதிரில், என்ன விஷயம் சொல்லு என அந்த ஏட்டு கேள்வி எழுப்புகிறார். 
 

எங்க ஊர் வழியா சாராயம் கடத்தறாங்க என தகவல் சொல்கிறார் அந்த இளைஞர். உங்களுக்கு இதே வேலையா போய்டுச்சி. கடத்தறான்னா எங்களை ஏன் தொந்தரவு செய்யற என கேள்வி எழுப்பியுள்ளார். 

 

road


 

உங்களிடம் சொல்லாம யாரிடம் சொல்வது என அந்த இளைஞர் கேட்டதும், போய் கலெக்டர்க்கிட்ட சொல்லு, செக்போஸ்ட் போட்ட பிறகும் கடத்தறாங்கன்னு சொல்லு போ. எங்களுக்கு வேலையில்லையா என மிரட்டும் ஆடியோ வெளியாகியுள்ளது.
 

இவர்கள் இருவர் பேசிய ஆடியோ தற்போது சமூக வளைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பேசியதாக கூறப்படும் ஏட்டுவிடம் வாணியம்பாடி டி.எஸ்.பி விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 


 

கடந்த வாரம், கடத்தல் பற்றி தகவல் சொன்னால் கடத்தல் கும்பலிடம் தகவல் சொல்லிவிடுகிறார்கள் போலிஸார், எங்களுக்கு பாதுகாப்பு தாருங்கள் என கோரிக்கை விடுத்துயிருந்தார்கள் என்பது குறிப்பிடதக்கது. 
 

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுக்கா தும்பேரி கிராமம் வழியாக ஆந்திரா மாநிலத்திற்கு தினந்தோறும் இருசக்கர வாகனத்தில் ஒரு கும்பல் வழக்கமாக அரிசி கடத்திவருகிறது. அதேபோல் ஆந்திராவில் காய்ச்சப்படும் சாராயம், அதே வழியில் கொண்டு வந்து வேலூர் மாவட்டம் முழுவதும் சப்ளை செய்யப்படுகிறது. இதுக்குறித்து தும்பேரி அண்ணா நகர் பகுதி இளைஞர்கள் மற்றும் மகாத்மா காந்தி இளைஞர் நற்பணி மன்றத்தினர் காவல்துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் தகவல் தந்துள்ளனர். 
 

இதனால் கடத்தலை தடுக்க அண்ணாநகர் பகுதியில் உள்ள மலையோரத்தில் காவல்துறை சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த சோதனைசாவடியில் இரண்டு போலிஸார் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளனர். அரிசி கடத்தல், கள்ளச்சாராயம் கடத்தல் இல்லாமல் இருந்துள்ளது. 


 

தற்போது இந்த சோதனை சாவடியில் உள்ள காவலர்களை வாராவாரம் கவனித்துவிட்டு தொடர்ச்சியாக அரிசி, சாராயம் கடத்தலை இருசக்கர வாகனத்தில் பகலிலேயே மூட்டைகளில் அரிசி கடத்துவதை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். சோதனை சாவடி அமைக்கப்பட்டும் இப்படி நடக்கிறதே என அந்த பகுதி இளைஞர்கள் மீண்டும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்க்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதில் தினமும் 15 ஆயிரம் கிலோ அளவுக்கு பகலிலேயே இருசக்கர வாகனத்தில் அரிசி கடத்துகின்றனர். இரவில் சாராயம் கடத்தி வருகின்றனர். இதுப்பற்றி காவல்துறையினரிடம் நாங்கள் முறையிட்டால், தகவல் சொன்னது யார் என்பதை கடத்தல் கும்பலுக்கு தகவல் கூறிவிடுகின்றனர். அவர்கள் எங்களை தொடர்பு கொண்டு கொலை செய்துவிடுவோம், உயிரோடு இருக்க முடியாது என மிரட்டுகின்றனர். 
 

அரிசி கடத்துகிறார்கள் என வருவாய்த்துறையினருக்கும் தகவல் தெரிவித்தோம், அவர்களும் கண்டுக்கொள்ளவில்லை. அதனால் இந்த சோதனை சாவடியில் நேர்மையான காவலர்களை பணியில் அமர்த்தி கடத்தலை தடுக்க வேண்டும், இரவும் பகலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு நேர்மையான அதிகாரிகளை நியமிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என வேண்டுக்கோள் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்