Skip to main content

ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம்; விசாரணையில் பகீர் தகவல்

Published on 06/07/2024 | Edited on 06/07/2024

 

 Information shared in the investigation on Armstrong assassination incident

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங். நேற்று (06-07-24) இவரின் வீட்டின் அருகே இருசக்கர வாகனங்களில் 6 பேர் கொண்ட கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தப்பியோடிய மர்ம கும்பலைத் தேடி வந்தனர். 

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அவரது வீட்டின் அருகே 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதற்கிடையே 5 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களைப் போல் உடை அணிந்து கொண்டு வந்த மர்ம நபர்கள் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியானது. இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். சரண் அடைந்த ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலு, ராமு, திருமலை, செல்வராஜ், அருள் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் கடந்த ஆண்டு ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் பட்டினப்பாக்கம் பகுதியில் ஆற்காடு சுரேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்