நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சாலையில், நேற்று (27.09.2024) கேரளாவில் இருந்து வந்த கண்டெய்னர் லாரி ஒன்று வரும் வழியெல்லாம் வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. அதோடு அந்த கண்டெய்னர் லாரி நிற்காமல் சென்றது. இதனால் போலீசார் லாரியை நீண்ட தூரம் விரட்டிச் சென்று பிடித்து நிறுத்தினர். அப்போது லாரியின் உள்ளே ஆயுதங்களுடன் சிலர் இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற பகுதியைச் சுற்றியுள்ள 3 ஏ.டி.எம்.களில் அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் கேரளாவில் கொள்ளையடித்துவிட்டு பணத்துடன் கண்டெய்னரில் தப்பிய ஏ.டி.எம். கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது.
மேலும் இந்த விசாரணையின் போது கண்டெய்னர் லாரியை திறக்கும் போது உள்ளே ஆயுதங்களுடன் இருந்த கொள்ளைக்கும்பல் போலீசாரை தாக்கியதால் துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளையர்களை போலீசார் பிடித்தனர். போலீசார் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் கொள்ளைக் கும்பலில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். அதோடு ராஜஸ்தானை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் கண்டெய்னர் லாரிக்குள் கட்டுக்கட்டாக பணம் மற்றும் பதிவு எண் இல்லாத ஹுண்டாய் கிரெட்டா கார் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் சேலம் டி.ஐ.ஜி., நாமக்கல் எஸ்.பி. ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் ஏ.டி.எம். கொள்ளைகள் குறித்து பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் குமாரபாளையத்தில் உள்ள எஸ்.பி.ஐ ஏ.டி.எம்.-ஐ கிரெட்டா காரில் வந்து நோட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு, ஒரு ஏடிஎம்.-ஐ கொள்ளையடிக்க இந்த கொள்ளையர்கள் சுமார் 15 நிமிடங்களே எடுத்துக் கொள்வதாகவும் போலீசார் நடத்திய விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏ.டி.எம்.களை கண்டறிந்து பல நாட்கள் நோட்டமிட்டு அதன் பின்பு வெல்டிங் இயந்திரங்களைக் கொண்டு ஏ.டி.எம் இயந்திரங்களை அறுத்து பணத்தைத் திருடுவதே மேவாட் கொள்ளையர்களின் வழக்கம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதோடு போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், குமாரபாளையத்தில் பிடிப்பட்ட ஏழு கொள்ளையர்களில் இரண்டு பேர் டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்துள்ளனர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் சென்னையில் இருந்து கண்டெய்னர் லாரி மூலம் திருச்சூர் சென்றுள்ளனர். அங்கிருந்து காரில் சென்று கொள்ளைச் சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது ஹரியானாவிலிருந்து 3 பேர் காரிலும், 2 பேர் கண்டெய்னர் லாரியிலும், 2 பேர் விமானத்திலும் வந்துள்ளனர். மொத்தம் 7 பேர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில் 2 பேர் விமானத்தில் சென்னை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ஏடிஎம் கொள்ளையர்களுக்கு ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நிகழ்ந்த பல ஏ.டி.எம். கொள்ளைச் சம்பவங்களில் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏ.டி.எம். கொள்ளையர்கள் கைது தொடர்பாக ஆந்திரா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட கொள்ளையர்களை இன்று (28.09.2024) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.