
உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், " சமாஜ்வாதிக் கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவின் மறைவு பெரும் அதிர்ச்சியும், துயரமும் அளிக்கிறது. இந்தியாவில் சமூகநீதியின் தூணாக திகழ்ந்தவர். பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவர். வட இந்தியாவின் தவிர்க்க முடியாத தலைவர். சமூக நீதியின் தூணாக திகழ்ந்த அவரது மறைவு சமூக நீதிக்கு பெரும் இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் எனது அன்பு சகோதரர் அகிலேஷ் சிங் யாதவுக்கும், சமாஜ்வாதிக் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!" எனத் தெரிவித்துள்ளார்.