தமிழகத்தில் பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதால் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் குறிப்பிட்ட 8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் அறிவித்துள்ளார். திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல் ஆகிய எட்டு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே பொது சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டியது அவசியம். டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதால் அதைத் தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என அரசு பொது மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.