2019 டிசம்பரில் தொடங்கிய கரோனா வைரஸ் பரவல், இன்றும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இரண்டாம் அலையாக, உருமாறிய கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், பல நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்திக்கொண்டிருக்கின்றன.
தமிழகத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 800 க்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை, 50 நாட்களுக்குப் பிறகு, மீண்டும் 5,000-ஐ தாண்டியது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று (16.03.2021) காலை 11 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில், ‘பொது இடங்களில் பொதுமக்கள் மாஸ்க் அணிந்து கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும். குடும்ப நிகழ்ச்சிகள், கூட்டங்களில் மாஸ்க் அணியாமல் பெரும்பாலோனோர் பங்கேற்கின்றனர். காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தி, நோய் தொற்று உள்ளவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை, கடந்த ஆண்டை போல கண்காணிக்க வேண்டும். கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அரசு துறைகள் கண்காணிக்க வேண்டும். தகுதிவாய்ந்த நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் பரப்புரை கூட்டங்களில் மாஸ்க் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும்’ என ஆலோசிக்கப்பட்டது.