ஒவ்வொரு நாளும் மனித இதயங்களுக்கு அதிர்ச்சி செய்தியாகத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதேபோல் இந்த வைரஸ் பாதிப்பால் இறப்புச் சதவீதமும் கூடி வருகிறது. அரசுகள் எடுக்கும் எந்த முயற்சியும் எடுபடவே இல்லை. எல்லாம் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டே இருக்கிறது.
சென்னை உட்பட நான்கு மாவட்டங்களைக் கொண்ட அந்த மண்டலம் வரும் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கில் உள்ளது. பிற மாவட்ட மண்டலங்கள் தளர்வு கொடுக்கப்பட்டு பேருந்து மற்றும் வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சென்னை மண்டலம் தவிர தமிழகம் முழுக்க ஒவ்வொரு மாவட்டமும் அந்தந்த மாவட்டத்திற்பட்ட பகுதிகளில் மட்டுமே போக்குவரத்து இயக்கம் இருக்கும். இ-பாஸ் இல்லாத எந்த வாகனமும் மற்ற மாவட்டங்களில் நுழைய அனுமதி இல்லை என 24-06-2020 அன்று மாலை தமிழக அரசு அறிவித்தது.
அதன் அடிப்படையில் ஈரோடு மாவட்ட எல்லைகள் தடுப்புகள் அமைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. சேலம் மாவட்டம் மேட்டூரிலிருந்து வரும் வாகனங்கள் ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டையிலும், அதே போல் சத்தியமங்கலம், சென்னிமலை, விஜயமங்கலம், கொடுமுடி, பவானி மற்றும் கருங்கல்பாளையம் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் வெளி மாவட்டத்திலிருந்து வந்தவர்களை போலீசார் அனுமதிக்காமல் அவர்களைத் திருப்பி அனுப்பினார்கள்.
ஈரோட்டிலிருந்து சேலம், நாமக்கல் செல்ல அங்கிருந்து ஈரோட்டுக்கு வருவதற்கும் கருங்கல்பாளையம் சோதனைச் சாவடி தான் பிரதானமானது. இங்கு இன்று காலை முதல் டூவீலர் மற்றும் நான்கு சக்கர வானங்களில் வந்தவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. வேலை விஷயமாக இரு சக்கர வாகனங்களில் ஈரோட்டிலிருந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதிகளுக்குச் சென்றவர்கள் எங்கள் வீடு சொந்த பந்தம் எல்லாம் ஈரோட்டில் தான் உள்ளது. இனிமேல் இங்கு வர மாட்டோம் என போலீசிடம் மன்றாடி சிலர் போராடியே ஈரோட்டுக்குள் நுழைய முடிந்தது.
இன்று மாலைக்குப் பிறகு எந்த வாகனமும் அனுமதிக்கப்படாததால் இரு மாவட்டங்களையும் இணைக்கும் காவேரிபாலம் வெறிச்சோடி காணப்பட்டது. ஒரிருவர் நடந்து வந்தனர் அவர்களையும் விடாத போலீசார் தகுந்த விசாரணைக்கு பிறகே அனுமதித்தனர்.