கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூலை முதல் வாரத்தில் இருந்து தொடங்கி தற்போது விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மைசூர், குடகு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளிலும் கடலோர மற்றும் மலை மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பொழிவதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
நேற்று (16/07/2024) மாலை நிலவரப்படி மொத்தமாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு 36,579 கன அடியாக அதிகரித்திருந்தது. தொடர்ந்து நீர் திறப்பு அதிகரித்ததால் இன்று (17/07/2024) காலை நிலவரப்படி 40,000 கன அடியாக இருந்த நீர் திறப்பு தற்போது 45,651 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கபினி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு தற்போது நீர்வரத்து 29,520 கனஅடியாக ஆக உள்ளது.
கர்நாடகாவின் முக்கிய அணையான கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து 36,675 கன அடியாக உள்ள நிலையில் 651 கனஅடி நீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. கபினி அணையில் இருந்து மட்டும் 45,000 கனஅடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.