தேங்காய் விளைச்சல் அதிகரிப்பால் சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது. இதனால் டன்னுக்கு 2000 ரூபாய் வரை விலை சரிந்துள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய சமையலில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் முக்கிய இடம் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் சேலம், அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, தர்மபுரி, ஈரோடு, காங்கேயம், பெருந்துறை, பொள்ளாட்சி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை முக்கிய பணப்பயிராக உள்ளது. இப்பகுதிகளில் விளையும் தேங்காய்கள் நாடு முழுவதும் உள்ள சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது தேங்காய் விளைச்சல் கணிசமாக அதிகரித்துள்ளதால் விலையும் கணிசமாக குறைந்துள்ளது.
இது தொடர்பாக தேங்காய் வியாபாரிகள் கூறுகையில், ''சேலம் சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் சராசரியாக 300 டன் முதல் 400 டன் தேங்காய் விற்பனைக்கு வருகின்றன. கடந்த சில மாதங்களாக தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. வழக்கமாக ஆடி மாதத்தில் கோயில் திருவிழாக்கள் அதிகமாக உள்ளதால் தேங்காய் வரத்தும் அதிகமாக இருக்கும். தற்போது சீசனும் நன்றாக உள்ளது.
கொங்கு மண்டலத்தில் ஆடி 1ம் தேதி, தலையாடி என்ற பெயரில் முக்கிய விழாவாக கொண்டாடப்படும். அன்றைய தினம் தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படும் என்பதால், தேங்காய்க்கான தேவையும் அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் ஒரு டன் தேங்காய் 24 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. தற்போது விளைச்சல் மற்றும் வரத்து அதிகரிப்பால் டன்னுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை குறைந்துள்ளது. இதனால் ஒரு டன் தேங்காய் தற்போது 22 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அடுத்த மாதம் டன்னுக்கு மேலும் 2 ஆயிரம் ரூபாய் குறைய வாய்ப்பு உள்ளது.
சில்லறை விலையில் தேங்காய் அதன் அளவைப் பொருத்து பல்வேறு விலைகளில் விற்பனை ஆகின்றன. பெரிய அளவிலான தேங்காய் 20 ரூபாய்க்கும், நடுத்தரமானது 15 முதல் 12 ரூபாய் வரையிலும், சிறிய அளவிலான தேங்காய் 10 முதல் 8 ரூபாய் வரையிலும் விற்பனை ஆகின்றன,'' என்றனர்.