தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் உட்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துவருகிறது. கரோனா அறிகுறி மற்றும் இணை நோய் பாதிப்புடன் சிகிச்சைக்கு வருபவர்கள் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கரோனா பாதிப்பால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நாராயண தேவன்பட்டியைச் சேர்ந்த போலீஸ்காரரின் அறுபது வயது தாய், கம்பத்தைச் சேர்ந்த 54 வயது ஆண், உத்தமபாளையத்தைச் சேர்ந்த 57 வயது ஆண், ஆண்டிபட்டியைச் சேர்ந்த 70 வயது முதியவர், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த 54 வயது ஆண், மதுரையைச் சேர்ந்த 79 வயது முதியவர் ஆகிய 6 பேர் உயிரிழந்தனர்.
இதேபோல், கரோனா அறிகுறி மற்றும் இணைய நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்றுவந்த 10 பேர் நேற்று (11.05.2021) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அவர்களில் சிலர் அந்தப் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள். சிலர் குரல் பரிசோதனை செய்யாத நிலையில், மூச்சுத் திணறல் பாதிப்பு, மாரடைப்பு, சிறுநீரக கோளாறு போன்ற பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் என மருத்துவத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
இருந்தபோதிலும் ஒரே நாளில் 16 பேர் இறந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறமிருக்க, தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சுமார் 340 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இருப்பினும், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கரோனாவுடன் வருபவர்களும் படுக்கை இல்லாமல் மருத்துவமனைக்கு வெளியே நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இதற்கிடையே, தேனி மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 417 பேருக்குப் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதன்மூலம் ஒருநாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24 ஆயிரத்து 591 ஆக உயர்ந்தது. மேலும், தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 310 பேர் குணம் அடைந்தனர். இதுவரை வைரஸ் பாதிப்பிலிருந்து 21 ஆயிரத்து 503 பேர் மீண்டுள்ளனர். தற்போது கரோனா பாதிப்புடன் இரண்டாயிரத்து 844 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.