Skip to main content

தலைமறைவான எம்.ஆர்.விஜயபாஸ்கர்; 5 தனிப்படைகள் அமைப்பு

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Absentee MR Vijayabaskar; 5 personnel system

தலைமறைவான முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஜூன் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது கடுமையான விவாதங்களுக்கு பிறகு மூன்று தரப்பு வாதங்களைக் கேட்ட மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் ஜூன் 25 ஆம் தேதிக்கு மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.

இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டிவரும் நிலையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரைப் பிடிக்க முயன்று வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

சேலத்தில் சக்கை போடு போடும் போதை மாத்திரை கும்பல்; பிடிபட்ட அதிர்ச்சி தகவல்!

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
Salem addiction pills

டாஸ்மாக் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் இளைஞர்கள், உடல்  உழைப்புத் தொழிலாளர்கள் கள், கள்ளச்சாராயம், குட்கா உள்ளிட்ட மாற்று போதைப் பொருட்களைத் தேடிச்செல்கின்றனர். குறிப்பாகச் சேலத்தில் இளைஞர்கள் அண்மைக் காலமாக போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை அதிகளவில் பயன்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது. தூக்க மாத்திரைகள், ஆல்கஹால் அதிகமுள்ள சிரப் வகை  மருந்துகள், வலி நிவாரணிகளை மருத்துவர்கள் பரிந்துரையின்றி மருந்துக் கடைகளில் விற்பனை செய்யக்கூடாது. ஆனாலும் விதிகளை மீறி சில மருந்துக் கடைகளில் இதுபோன்ற மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு  வருவது தொடர்கிறது.

மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளும் அவ்வப்போது மருந்து கடைகளில் சோதனை நடத்தி, விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டு வரும் கடைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனினும்,  இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. இந்நிலையில், சேலம் செவ்வாய்ப்பேட்டை காவல்நிலைய காவல்துறையினர் நான்கு சாலை பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த மூன்று இளைஞர்களைப் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், சேலம் செவ்வாய்ப்பேட்டை பெரியார் நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(22),  தட்சணாமூர்த்தி(22), வீரபாண்டி ராஜ வீதியைச் சேர்ந்த அர்ஜூனன்(26) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்கள், நான்கு வழிச்சாலை பகுதியில் உள்ள மருந்து விற்பனை பிரதிநிதிகள் சிலரிடம் நேரடியாக வலி நிவாரணி மாத்திரைகளை குறைந்த விலைக்கு வாங்கி போதைக்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர். அவற்றைக்  கூலித்தொழிலாளர்கள், இளைஞர்களைக் குறி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனையும் செய்துள்ளனர். பத்து  மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையை 100 ரூபாய்க்கு வாங்கி, அதை 200 ரூபாய்க்கு விற்று வந்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 900  மாத்திரைகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டப் பிறகு, சேலம் மத்திய  சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் குறித்தும், பிடிபட்ட இளைஞர்களுடன்  வேறு யார் யாருக்குத் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறனர். இளைஞர்களின் புதிய போதைக் கலாச்சாரம், சேலம் மக்களிடையே அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி  உள்ளது. 

Next Story

மாநகராட்சி கூட்டத் தொடர்; தி.மு.க.கவுன்சிலர்கள் இடையே காரசார வாக்குவாதம்

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
DMK in the Erode Municipal Corporation meeting. Argument between councilors

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் நாகரத்தினம் தலைமையில்  நடைபெற்றது. துணை மேயர் செல்வராஜ், உதவி ஆணையாளர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநகராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கியதும் திருக்குறள் வாசிக்கப்பட்டு அதற்கான விளக்கம் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஈரோடு முன்னாள் எம்.பி.கணேசேமூர்த்தி மறைவுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தெரு நாய்கள் தொந்தரவு குறித்து தடுப்பு நடவடிக்கைகள்,ஊராட்சி கோட்டை குடிநீர் முறையாக சில பகுதிகளுக்கு செல்லாதது, வார்டு பகுதியில் சாலை வசதிகள், சீரமைக்காத பாதாள சாக்கடை காரணமாக சாலை விபத்து மற்றும் ஆழ்துளை கிணற்றில் சாய கழிவு கலந்து சுகாதார சீர்கேடு போன்ற பொதுமக்கள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண குறித்து மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தில் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக கவுன்சிலர்கள், கூட்டத்தின் போது கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனை தடுக்க தவறியதால் 65 -க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், இதற்கு பொறுப்பு ஏற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும், மேலும் இது குறித்து சட்டமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அனுமதிக்காததைக் கண்டித்தும் அதிமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் தங்கமுத்து தலைமையில் வெளிநடப்பு செய்தனர். 

அப்போது தமிழக அரசு மீது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புகாருக்கு, திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராய விற்பனையால் ஏற்பட்ட உயிரிழப்பை சுட்டிகாட்டி பேசினர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின்னர் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்தச் சம்பவத்தால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து திமுக கவுன்சிலர் கோகிலாவாணி பேசும்போது, எனது வார்டுக்கு போதிய தூய்மை பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என்று பேசினார். ஏராளமான பணிகள் நடைபெறாமல் உள்ளது. எனது வார்டில் அதிகாரிகள் எனக்கு தகவல் தெரிவிக்காமல் அவர்களாகவே வந்து பணிகளைத் தொடர்கின்றனர். இது குறித்து எனக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்று பேசினார். இது குறித்து அவர் மேயரிடம் பேசும் போது மற்ற திமுக கவுன்சிலர்கள் அதற்கு பதில் அளிக்கவும் முயன்றனர். அப்போது திமுக கவுன்சிலர் இடைய கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.