காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாகக் கர்நாடக அணைகளிலிருந்து நீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாகக் குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகக் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக கர்நாடகாவின் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்தும், கபினி அணையிலிருந்தும் நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் கடந்த 28 ஆம் தேதி மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகபட்சமாக வினாடிக்கு 15,232 கன அடியாக இருந்தது. படிப்படியாக நீர்வரத்து குறைந்து வருகிறது. தற்போது நீர்வரத்து 13,104 கன அடியில் இருந்து 11,342 கன அடியாக குறைந்துள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவானது 14,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 2000 கன அடி கூடுதலாக திறந்து விடப்பட்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 65.63 லிருந்து 65.60 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 29.03 டிஎம் சியாக உள்ளது.