சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மருத்துவத்துறைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., "தமிழ்நாட்டில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட யாருக்கும் இதுவரை ஆக்சிஜன் உதவி தேவைப்படவில்லை. ஆக்சிஜன் தேவைப்படாது என்ற நிலை அப்படியே இருக்கும் எனக் கூற முடியாது. மூன்று மாதங்களில் இருந்து ஆறு மாதங்களுக்கு தேவையான ரெம்டெசிவிர் உள்ளிட்ட அனைத்து மருந்துகளும் கையிருப்பில் உள்ளன. வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வசதியிருந்தால், தொற்று உறுதியானவர்கள் வீட்டுத்தனிமையில் இருக்கலாம்.
பண்டிகைகள் நெருங்கும் நேரத்தில் கவனக்குறைவாக இருந்தால் தொற்று பாதிப்பு பன் மடங்கு உயரும். அரசின் அனைத்து விதிமுறைகளையும் மக்கள் முறையாகப் பின்பற்றி, தொற்று பரவல் சங்கிலியை உடைக்க உதவ வேண்டும். கரோனா, ஒமிக்ரான் பரவலைத் தடுக்கவே கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒமிக்ரான் உறுதியான அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்ற நிலை இல்லை." இவ்வாறு மருத்துவத்துறைச் செயலாளர் தெரிவித்தார்.