விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள மீனவர் குப்பமான எக்கியர் குப்பத்தின் வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடந்து வந்துள்ளது. இந்நிலையில் இங்கு சாராய பாக்கெட்டுகளை வாங்கி குடித்தவர்கள் வீட்டிற்கு சென்றதும் மயங்கி கீழே விழுந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களது உறவினர்கள் மயங்கி விழுந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், யாரெல்லாம் கள்ளச்சாராயம் குடித்தார்கள் என்று கண்டறிந்து அவர்களை எல்லாம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் யாராவது கள்ளச்சாராயம் குடித்துவிட்டு கடலோரப் பகுதியில் மயங்கிக் கிடக்கின்றனரா என்று இரவும் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்டு 30 பேருக்கும் மேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது வழக்கு பதியப்பட்டு அமரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மரக்காணம் காவல் நிலையல் ஆய்வாளர் உட்பட 5 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் மற்றும் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.