நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள எளையம்பாளையம் பகுதியில் பிரபல தனியார் மகளிர் கல்விக் குழுமம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்வி நிறுவனத்தின் சார்பில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கல்லூரி, செவிலியர் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்தக் கல்வி நிறுவனத்தில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில் இந்த கல்வி நிறுவனத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து இந்தக் கல்வி நிறுவனத்தில் நேற்று (16.05.2024) காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் கல்லூரியின் தாளாளர் கருணாநிதி இல்லத்திலும், அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், கல்வி நிறுவனத்தில் இரண்டாவது நாளாக இன்று (17.05.2024) 30க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் திருச்செங்கோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் நாடாளுமன்றம் மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் இந்த கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளதும், கல்லூரி தாளாளர் கருணாநிதி, அதிமுக முன்னாள் எம்.பி. தம்பிதுரையின் நெருங்கிய உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே சமயம் நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியின் தலைவர் கோல்டன் ஹார்ஸ் ரவி என்பவர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.