அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாகச் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டு அங்கு மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவருக்கு சொந்தமான, கரூரில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதே போன்று கரூரில் உள்ள தனியார் மார்பில்ஸ் கடை உரிமையாளரின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சோதனை மத்திய துணை ராணுவப் படையினர் உதவியுடன் 4 இடங்களில் நடைபெற்று வருகிறது.