வருமான வரி வழக்கில் ஏழு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோரி அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த மனு சட்டப்படி பரிசீலிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் 2017 ஏப்ரலில் நடந்த வருமான வரித்துறை சோதனையின் அடிப்படையில், 2011- 12 ஆம் நிதி ஆண்டிலிருந்து 2018- 19 ஆம் ஆண்டு வரை தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளை மறு மதிப்பீடு செய்யும் நடைமுறைகளை வருமான வரித்துறை மேற்கொண்டு வருகிறது.
![INCOME TAX CASE STATE MINISTER VIJAYA BASKAR CHENNAI HIGH COURT](http://image.nakkheeran.in/cdn/farfuture/8n5QX7d1fGMO8LAwhM8SHX9KTfJ7wbcH_QA3ClGfQtc/1576785728/sites/default/files/inline-images/CHC1_22.jpg)
அந்த நடைமுறையில் 12 பேர் சாட்சியம் அளித்த நிலையில், அவர்களில் 5 பேரை மட்டுமே விஜயபாஸ்கர் தரப்பு குறுக்கு விசாரணை செய்ய வருமான வரித்துறை அனுமதித்துள்ளதாக கூறப்படுகிறது.
மீதமுள்ள சேகர் ரெட்டி, சீனிவாசுலு, மாதவ் ராவ் உள்ளிட்ட 7 பேரையும் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க கோரியும், தனக்கு எதிராக திரட்டப்பட்ட ஆவணங்களின் நகல்களை வழங்கக் கோரியும் வருமான வரித்துறையிடம் விஜய பாஸ்கர் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. அதில், சேகர் ரெட்டி நிறுவனத்தில் தனக்கு 20 சதவீத பங்கு உள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து சேகர் ரெட்டி உள்ளிட்டோரிடம் குறுக்கு விசாரணை செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் வருமான வரித்துறை முடிவெடுக்காமல் இருப்பதால், சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்யவும், ஆவணங்களை வழங்க உத்தரவிடக் கோரியும் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், அனைத்து சாட்சியங்களிடமும் குறுக்கு விசாரணை செய்து முடிக்கும் வரை, வருமான வரிக் கணக்கு மதிப்பீடு தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என வருமான வரித்துறைக்கு உத்தரவிடவும் கோரியிருந்தார்.
இந்த மனு நேற்று (19.12.2019) மீண்டும் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்த போது, சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோரிய விஜயபாஸ்கரின் மனு சட்டப்படி பரிசீலிக்கப்படும் என வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. வருமான வரித்துறையின் இந்த விளக்கத்தை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை இன்று (20.12.2019) தள்ளிவைத்தார்.