வேலூரில் சாமியாரை ஐந்து பேர் அடித்துக் கொன்று புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்குள்ள மலையடிவாரத்தில் உள்ள வள்ளிமலைக் கிராமத்தில் விவசாய நிலத்தில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சாமியார் ரவி(65) என்பவர், குடிசை கட்டி வசித்து வந்தார்.
இந்நிலையில் சாமியார் ரவி, மணல் கடத்தல், கஞ்சா விற்பனை போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து போலீசாருக்கு அவ்வப்போது துப்புக்கொடுத்து வந்ததாகவும், இதனால் சமூக விரோதிகள், சாமியாரை கொலை செய்து சடலத்தை புதைத்து விட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.
இதையறிந்த மேல்பாடி போலீசார் வள்ளிமலையில், சாமியாரின் சடலம் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்தைக் கண்டறிந்தனர். டிஎஸ்பி சரவணன், இன்ஸ்பெக்டர் அன்பரசி மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் வள்ளிமலைப் பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன்(40), சின்ன வள்ளிமலையைச் சேர்ந்த மதன்குமார்(36), மேல்பாடியைச் சேர்ந்த லோகேஷ்(34), வள்ளிமலையை சேர்ந்த பிரபு(31) ஆகியோரைப் பிடித்து விசாரித்தனர். அதில், சாமியார் ரவியை அடித்துக் கொன்று புதைத்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அரி கிருஷ்ணன், மதன்குமார். லோகேஷ்குமார், பிரபு ஆகிய 4 பேரை இன்று கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், சாமியார் ரவி தங்கியுள்ள குடிசையின் பக்கத்தில் ஹரிகிருஷ்ணனுக்கு சொந்தமான நிலம் உள்ளது. கடந்த வாரம் நிலத்திற்கு வந்த ஹரிகிருஷ்ணனின் செல்போன் காணாமல் போனது. இதனை சாமியார் ரவி எடுத்திருக்கலாம் எனச் சந்தேகப்பட்டு ஹரிகிருஷ்ணன், அவரது நண்பர்கள் மதன்குமார், லோகேஷ், பிரபு மற்றும் திருமலை ஆகிய 5 பேரும் சென்று அவரை கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 5 பேரும், ரவியை அடித்து கீழே தள்ளியுள்ளனர், இதில் அவர் மயங்கி விழுந்து இறந்துள்ளார். அதை மறைக்க அவரது சடலத்தை யாருக்கும் தெரியாமல் புதைத்துள்ளனர், இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
கொலை செய்து புதைக்கப்பட்ட சாமியார் ரவியின் சடலம் தடயவியல் நிபுணர்கள், தாசில்தார் சரவணன் ஆகியோர் முன்னிலையில் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அங்கேயே புதைக்கப்பட்டது. இந்தக் கொலையில் தொடர்புடைய வள்ளிமலையைச் சேர்ந்த திருமலை(32) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.