அரசு பேருந்தில் பயணம் செய்த மாணவரின் கால்கள் மீது பேருந்து சக்கரம் ஏறி விபத்தில் சிக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை குன்றத்தூர் அருகே உள்ள கொல்லச்சேரி பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், குன்றத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் இருந்து குன்றத்தூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பள்ளி முடித்து விட்டு தங்களது வீட்டிற்கு செல்ல ஏராளமான மாணவர்கள் இந்த அரசுப் பேருந்தில் ஏறி பயணம் செய்தனர். இதில் சில மாணவர்கள், மிகவும் ஆபத்தான முறையில் பேருந்து படியில் தொங்கியபடி பயணம் செய்து கொண்டிருந்தனர்.
கூட்ட நெரிசலில் பேருந்து சென்று கொண்டிருந்த போது படியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களில் ஒருவர் யாரும் எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்தார். இதில் அவரது காலிலே பேருந்து சக்கரம் ஏறியுள்ளது. இதனால், அவரது இரண்டு கால்களும் துண்டாகின. இதில் அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் பேருந்தை நிறுத்துமாறு கூறி கீழே இறங்கினர். இதனையடுத்து, உடனடியாக அந்த மாணவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பள்ளி மாணவர் ஒருவர் விபத்தில் சிக்கி இரண்டு கால்களும் துண்டாகிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தகவல் அறிந்து விரைந்து வந்த குன்றத்தூர் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.