
தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவ மாணவிகள் கரோனா பரவல் தொடங்கிய நேரத்தில் தேர்வு எழுதியதால், பயத்தில் பலரும் சரியாக தேர்வு எழுதவில்லை. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தியதால், அரசும் சில தேர்வுகளை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது. கரோனா பரவல் மிக வேகமாக உள்ள சூழ்நிலையில் தேர்வு நடத்தக்கூடாது என திமுக உட்பட பல எதிர்க்கட்சிகளும், கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதோடு கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட தேர்வு முடிவுகளின் அடிப்படையில் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
நீண்ட தயக்கத்துக்கு பின் அதனை தமிழக அரசு ஏற்று தேர்வுகளை ரத்து செய்து அனைவரையும் தேர்ச்சி பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்தது. அதனைத்தொடர்ந்து ஜூலை 16ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான பொது தேர்வு ரிசல்ட் வெளியிட்டது. தமிழகத்தில் வழக்கம்போல் மாணவிகள் முதல் இடத்தை பிடித்திருந்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொட்டாரமடுகு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பாலாஜி. இவரது மகன் அசோக்குமார், குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்துவந்தார். இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்தார். இந்த நிலையில் நேற்று காலை தேர்ச்சி விவரம் மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதில் 481 மார்க் எடுத்திருப்பதாக ரிசல்ட் வந்துயிருந்தது. அந்த பள்ளியில் இருந்து தேர்வு எழுதியவர்களில் அவர் தான் முதல் மதிப்பெண்ணாம். அவர் எதிர்பார்த்ததை விட குறைவான மார்க் எடுத்ததால் மனவேதனையில் அவர் இருந்துள்ளார்.
இதே மாணவன் கடந்த 10ம் வகுப்பு பொதுதேர்விலும் 448 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடத்தை பெற்றுள்ளார். இதனால் 590 மார்க் எடுப்பார் என எதிர்பார்ப்பு வைத்திருந்துள்ளனர். மதிப்பெண் குறைவானதும் கவலையாகி அழுதுகொண்டே இருந்துள்ளார் மாணவன் அசோக்குமார் .
இந்நிலையில், ஜூலை 17 ந்தேதி விடியற்காலை, வீட்டருகே இருந்த மாந்தோப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஊர் மக்கள் பார்த்துவிட்டு அதிர்ச்சியாகி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவயிடத்துக்கு வந்த குடியாத்தம் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். அதிக மதிப்பெண் எடுக்க முடியவில்லை என மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.