திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்தவர் பெருமாள். அவருடைய மனைவி கவிதா. கடந்த 2017 ஆம் ஆண்டு கவிதா-பெருமாள் தம்பதியினர் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று தனித்தனியே வாழ்ந்து வந்தனர். அதனையடுத்து கவிதா தூத்துக்குடியைச் சேர்ந்த எட்வின் என்பவருடன் பழகியதாக கூறப்படுகிறது. எட்வினின் பேச்சை கேட்டு அவர் தூத்துக்குடிக்கு சென்றதாகவும், தூத்துக்குடியில் குமரன் நகரில் ஒரு வாடகை வீட்டில் இருவரும் குடித்தனம் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
குமரன் நகரில் இரண்டாவது கணவருடன் வசித்து வந்த கவிதா முத்தையாபுரத்தில் அக்கவுண்டன்ட் வேலைக்கு செல்ல, எட்வின் ஐஸ் கம்பெனியில் வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 8 தேதி கவிதா திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. காணாமல்போன கவிதாவை எட்வின் தேடி வந்த நிலையில் கவிதா உடல் கருகிய நிலையில் விவேகானந்தா நகரில் ஒரு வீட்டில் பிணமாக கிடந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தாளமுத்துநகர் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்ட பொழுது கவிதா இரண்டாவது கணவரான எட்வினையும் பிரிந்து ஆட்டோ ஓட்டுநரான கருப்பசாமி என்பவருடன் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்ததும் தெரியவந்தது.
எனவே இந்த கொலையில் யார் யார் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்று குழம்பித் தவித்த போலீசார் கருப்புசாமியை பிடித்து விசாரித்தபோது, கவிதா வேலைபார்க்கும் இடத்தில் பல ஆணுடன் நெருக்கமான நட்பை வைத்திருந்ததாகவும், அவர்களிடம் எல்லாம் தனது செல்போன் நம்பரை கொடுத்ததாகவும் தெரிவந்தது. இவர்களில் அங்கு ஆட்டோ ஓட்ட வரும் ஒருவரான கருப்புசாமியுடனும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் தெரிந்துகொண்ட இரண்டாவது கணவர் எட்வின் கவிதாவை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கடந்த 8ம் தேதி எட்வின் பணிக்கு சென்ற பின்னர் கருப்பசாமிக்கு போன் செய்த கவிதா கருப்புசாமியை வீட்டுக்கு வரவழைத்து தன்னை காப்பாற்றும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அதனைக் கேட்ட கருப்புசாமி கவிதாவை அழைத்துச் சென்று விவேகானந்தா நகரில் தனி வீடு எடுத்து குடிவைத்ததாக கூறப்படுகிறது. இருவரும் குடித்தனம் நடத்தி வந்த நிலையில் கவிதா கொளுத்தப்பட்ட பத்தாம் தேதி இரவு அவருக்கு தொடர்ந்து போன் அழைப்புகள் வந்தவண்ணம் இருந்துள்ளது.
ஐந்துக்கும் மேற்பட்ட செல்போன் அழைப்புகளை எடுத்து கவிதா பேசியதைக் கண்டு ஆத்திரமடைந்த மூன்றாவது கணவன் கருப்பசாமி இவர்கள் எல்லாம் யார் என்று கவிதாவிடம் விசாரிக்க, அவரோ தனது தம்பி, சித்தப்பா என மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.
ஒருகட்டத்தில் ஒரு அழைப்பை எடுத்து பேசிய கவிதா, நீண்ட நேரம் பேசியதால் ஆத்திரமடைந்த கருப்புசாமி அங்கு கிடந்த விறகு கட்டையை எடுத்து கவிதாவின் தலையில் அடித்துவிட்டு அங்கிருந்து ஆவேசமாக வெளியே சென்றதாக போலீசில் கருப்பசாமி தெரிவித்துள்ளான். உருட்டுக்கட்டையால் தாக்கியதாக கருப்பசாமி வாக்குமூலம் அளித்த நிலையில் அந்த வீட்டில் கவிதாவின் உடல் எரிக்கப்பட்டு இருந்தது. இதனால் கவிதாவின் உடலை எரித்தவர் யார் என்று போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.