கழிவுநீர் தொட்டியினை சுத்தம் செய்தபோது, எழுந்த விஷவாயுவால் கூலித்தொழிலாளர்கள் நால்வர் உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் தட்டாப்பாறை காவல் நிலையத்திற்குட்பட்ட கீழ செக்காரக்குடியினை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது வீட்டிலுள்ள கழிவுநீர் தொட்டியினை சுத்தம் செய்ய, நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்த இசக்கிராஜா, பாண்டி, பாலா மற்றும் ஆலங்குளத்தை சேர்ந்த தினேஷ் உள்ளிட்ட நால்வரும் இன்று பணிக்கு வந்துள்ளனர்.
இன்று ஆரம்பிக்கப்பட்ட பணியில் முதலில் இருவர் கழிவுநீர் தொட்டியில் இறங்கியும், மேற்புறத்தில் இருவருமாக இருந்து சுத்தம் கொண்டிருக்க நிலையில் வெகு நேரமாகியும் கழிவுநீர் தொட்டியில் இறங்கியவர்கள் மேலே வராததால், மேற்பகுதியில் இருந்த இருவரும் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி தேடியுள்ளனர்.
இந்நிலையில் அவர்களும் வெளியே வராததால் தீயணைப்பு துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் தீயணைப்புத்துறையினர் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி உயிரற்ற நான்கு உடல்களையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தட்டாப்பாறை காவல் நிலையத்தார் வழக்குப் பதிவு விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் கழிவு நீர் தொட்டியின் விஷவாயு தாக்கி இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. இதனால் அங்கு பரப்பரப்பு நிலவி வருகின்றது.