


தஞ்சை மாவட்டம் திருவையாறில் தனியார் பேருந்து மீது மின்கம்பி உரசி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த திருக்காட்டுப்பள்ளியில் உள்ள வரகூரில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. திருக்காட்டுபள்ளியில் இருந்து இன்று காலை தஞ்சை சென்ற தனியார் பேருந்து எதிரே வந்த லாரிக்கு வழிவிடுவதற்காக ஒதுங்கியபோது சாலையின் ஓரம், சாலை விரிவாக்கத்திற்காக தோண்டப்பட்ட குழியில் இறங்கியது. அதோடு மட்டுமல்லாமல் சாலையின் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் தாழ்வாக தொங்கிக்கொண்டிருந்த மின்கம்பி பேருந்தின் மீது உரசியுள்ளது. இதனால் மின்சாரம் பாய்ந்ததில் பேருந்தில் இருந்த கல்யாணராமன், கணேசன், நடராஜன் ஆகிய மூன்றுபேர் உயிரிழந்தனர். அதேபோல் இந்த விபத்தில் சிக்கிய மாரியம்மா, கவிதா ஆகியோர் சிகைச்சைக்காக திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், கவிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல் பத்துக்கும் மேற்பட்டோர் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்த விபத்திற்கு பேருந்து ஓட்டுநர் காரணமா அல்லது மின்சார வாரியத்தின் அலட்சியமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். தனியார் பேருந்து மீது மின்கம்பி உரசி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.