நெல்லையில் ஜூலை 23ஆம் தேதி நெல்லை ரெட்டியார்பட்டியிலுள்ள வீட்டில் முன்னாள் திமுக பெண் மேயர் உமாமகேஸ்வரி அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகிய மூவரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது.
கடந்த 6 நாட்களாக நடந்து வந்த விசாரணையின் முடிவில் தற்போது இந்த கொலையில் சந்தேகிக்கப்படும் முக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல்கள் வந்துள்ளது. இந்தக் கொலைக் குற்றத்தில் முக்கிய குற்றவாளி எனக் கருதப்படும் நபரை கைது செய்து விசாரணை செய்து வருவதாகவும் முக்கிய தகவல்கள் வெளியே வந்திருக்கிறது.
இந்த கொலை வழக்கில் இதுவரை துப்பு கிடைக்காத நிலையில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் நடத்தப்படும் முழு விசாரணைக்கு பிறகே இந்த கொலை எதற்காக நடத்தப்பட்டது, எப்படி நடத்தப்பட்டது போன்றவை தெரியவரும் என தெரிய வருகிறது. ஆனால் அது அதிகாரபூர்வ கைது என இன்னும் போலீசாரால் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த கொலை சம்பவத்தை பொறுத்தவரை காவல்துறை எடுத்துக் கொண்ட நகர்வுகள் அனைத்துமே முக்கியமானவை. கொலை செய்யப்பட்ட வீட்டுக்கு பக்கத்தில் வீடுகள் கிடையாது, சிசிடிவி கேமராக்கள் கிடையாது இப்படி விசாரணையில் தொய்வு ஏற்பட பல்வேறு காரணங்கள் இருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.