'நாளை நான் சென்னையில் இருப்பேன்' என்று பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாளை (14/02/2021) காலை 11.15 மணியளவில் சென்னை வருகிறார். அதைத் தொடர்ந்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர், ரூபாய் 3,770 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரயில் பகுதி- 1 விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்து, வண்ணாரப்பேட்டையில் இருந்து, விம்கோ நகர் வரையிலான பயணிகள் ரயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து, நாளை (14/02/2021) மதியம் சென்னையில் இருந்து கேரளா மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி செல்கிறார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நாளை நான் சென்னையில் இருப்பேன். நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவது, நகர்ப்புற இணைப்பு, பாதுகாப்புத் துறையில் ஆத்மநிர்பார்தா ஆகியவை இந்தத் திட்டங்களின் மையமாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் சென்னை வருகையையொட்டி, சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.