நாகையில் உணவகத்தில் வேலைக்குச் சென்ற 16 வயது சிறுமி, 3 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நாகையில் குடும்ப வறுமை, திடீர் உடலநலக்குறைவு போன்ற காரணங்களால் நாட்களை நகர்த்த முடியாததால் வீட்டில் முடங்கிய தாய் தன்னுடைய 16 வயது மகளை தான் வேலை பார்த்த உணவகத்திற்கு வேலைக்காக அனுப்பியுள்ளார். 16 வயது மகளும் தாயின் நிலை மற்றும் குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டு அந்த உணவகத்திற்கு வேலைக்குச் சென்றுள்ளார். வேலைக்குச் சிறுமி தனியாக வந்து செல்வதை அறிந்த உணவகத்தின் உரிமையாளர் சண்முகசுந்தரம் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து அந்தப் பதினாறு வயது சிறுமி தன் தாயிடமோ அல்லது குடும்பத்தாரிடமோ எதுவும் கூறாமல் வீட்டுக்கு அருகில் வசிக்கும் துர்கா தேவி என்ற பெண்ணிடம் தனக்கு நேர்ந்த கொடுமையைக் கூறியுள்ளார்.
அவர் உதவுவார் என நம்பிக்கையுடன் அந்தச் சிறுமி நடந்த அனைத்தையும் அவரிடம் கூற, இதைக்கேட்ட துர்காதேவி சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரத்தை சாதகமாகப் பயன்படுத்தி அப்பகுதியில் உள்ள விஜயன் என்ற நபரிடம் இதைத் தெரிவித்துள்ளார். சிறுமிக்கு உதவுவதாகச் சிறுமியிடம் பழகிய விஜயன் இறுதியில் அவரும் அந்தச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதேபோல் துர்கா தேவியின் கணவரும் சிறுமியை அடிக்கடி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
அடுத்தடுத்து, மூன்று பேர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததால் அதிர்ச்சியில் உறைந்த சிறுமி இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் சண்முகசுந்தரம், விஜயன், அரவிந்தன் மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த துர்கா தேவி ஆகிய 4 பேரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தற்பொழுது சிறுமி வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
"புனித பூமியான இந்திய நாட்டில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடகிறது. இதனால், இந்தியா பாலியல் வன்கொடுமைகான நிலமாக மாறியுள்ளது. இது துரதிஷ்டவசமானது. குறிப்பாக புலம்பெயர்ந்த பெண் தொழிலாளர்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பில்லை" என அண்மையில் உயர்நீதிமன்றம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தது.
அண்மையில் ஹர்தாஸில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மருத்துவச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அது தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் போராட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இந்தியாவில் ஒரு 'ஹர்தாஸ்' மட்டும் தானா என்ற கேள்வியும் சரியானதே...