நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் பொங்கல் விழா கொண்டாடிக்கொண்டிருந்த அரசு அதிகாரிகள் மத்தியில் இளம்பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
கோவை மாவட்டம் பீளமேடு, காந்தி நகரைச் சேர்ந்தவர் பட்டதாரிப் பெண் அனுசுயா. அவருக்கும், விருதுநகர் மாவட்டம் பிச்சப்பத்தி மாங்குளம், வடக்கு வீதியைச் சேர்ந்த மாரிச்செல்வத்திற்கும் இடையே முகநூல் மூலம் காதல் ஏற்பட்டு கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணமும் நடந்து முடிந்திருக்கிறது. திருமணத்திற்காக பெண் வீட்டாரிடமிருந்து மூன்று லட்சம் ரூபாய் பணமும், ராயல் என்ஃபீல்ட் பைக்கும், 5 பவுன் தங்க நகைகளையும் டவுரியாக வாங்கியிருக்கிறார் மாரிசெல்வம்.
இதற்கிடையில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த மாலதி என்கிற பெண்ணை ஷேர் சாட் மூலம் காதல்வயப்படுத்தி, அந்த பெண்ணையும் திருமணம் செய்து கொண்டு சொகுசு வாழ்க்கையில் இருக்கிறார் மாரிச்செல்வம்.
இதையறிந்து பதறிப்போன பட்டதாரிப் பெண்ணான அனுசுயா தன்னை ஏமாற்றிவிட்டு மறுமணம் செய்த மாரிச்செல்வம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களிடமிருந்து டவுரியாக பெற்ற பணம் நகைகளை மீட்டுத்தர வேண்டும் என்றும் வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாருக்கு போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலைகழிக்க விட்டதால் விரக்தியான பாதிக்கப்பட்ட பட்டதாரிப் பெண் அனுசுயா தனது பெற்றோர்களுடன் இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு தலையில் மண்ணெண்ணெய் ஊற்றியபடியே தீக்குளிக்க முயற்சித்தார். அதே நேரத்தில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு அதிகாரிகள் கூடிநின்று பொங்கல் விழாவை கொண்டாடிக்கொண்டிருந்தனர், அந்த நேரத்தில் அனுசியா தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பெண்ணின் கையில் இருந்த மண்ணெண்ணை பாட்டிலை மாவட்ட ஆட்சியரக ஊழியர் செந்தில் என்பவர் பறித்து தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினார். இதையடுத்து அங்கு வந்த நாகூர் போலீசாரும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், அனுசியாவிடம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதுகுறித்து அனுசியா கூறுகையில், "எனக்கு இழைத்த கொடுமை, இனி எந்த பெண்ணுக்கும் நடக்ககூடாது, அவனுக்காக பல அவமானங்களை சந்திச்சிட்டேன். பல இடங்களில் கடன்வாங்கி கொடுத்துவிட்டேன். எனது வாழ்க்கையை பாழாக்கிவிட்டான். அடுத்தவர்களிடம் அவனுக்கு வாங்கிக்கொடுத்த பணத்தையாவது எனக்கு பெற்றுதரவேண்டும். அவன் இனி யாரையும் ஏமாற்றாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.