கோவை அருகே ரயில் மோதி ஒரே கல்லூரியை சேர்ந்த 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொடைக்கானலை சேர்ந்தவர் பீர் முகமது. இவரது மகன் சித்திக் ராஜா வயது 22 இவர் கோவை சூலூர்அருகே உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு சிவில் படித்து வந்தார். இவருடன் படித்து நிலக்கோட்டையைச் சேர்ந்த ராஜசேகர் 22, தேனியை சேர்ந்த விஷ்னேஷ 22 இவர் அதே கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் இன்ஜினியரிங் மெக்கானிக் படித்து முடித்திருந்த ராஜபாளையத்தை சேர்ந்த கருப்பசாமி 22 ,கவுதம் 21 ஆகியோர் நடந்து முடிந்த தேர்வில் தோல்வி அடைந்தனர்.
![incident in kovai...](http://image.nakkheeran.in/cdn/farfuture/uwG0Ma3vQqkzwL06pLV0dL-aSMU-F6mnJumaYDU_ax4/1573793924/sites/default/files/inline-images/b16_1.jpg)
தோல்வி அடைந்த பாடத்தில் மறுதேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு வந்திருந்தனர். தேர்வு முடிந்ததும் இந்த ஐந்து பேரும் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தியுள்ளதாக தெரிகிறது. பீர் முகம்மதுவின் அறைக்கு சென்ற 5 பேரும், மீண்டும் மது அருந்துவதற்காக ராவுத்தர் பிரிவு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று உள்ளனர். டாஸ்மார்க் கடையை மூடுவதற்கு நேரமாகிவிட்டதால் மதுபாட்டில்களை வாங்கியவர்கள் அதே பகுதியில் உள்ள தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் வந்ததை, அறியாத அளவிற்கு போதை தலைக்கேறிய நிலையில் இருந்துள்ளனர். அப்போது ரயில் வருவதை பார்த்த விஸ்வனேஷ் என்பவர் மட்டும் தப்பிவிட்டார் . கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் மற்ற நால்வர் மீதும் மோதியதில் உடல் துண்டாகியும், தூக்கி வீசப்பட்டும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரயிலில் அடிபட்டு இறந்தவர்களின் உடலை மீட்டு, கோவை அரசு மருத்துவக்கலூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் இதுகுறித்து ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.