Skip to main content

சாலையோர கடைகள் மீது தாறுமாறாக மோதிய கார்... சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி!

Published on 09/07/2022 | Edited on 09/07/2022

 

incident on Kodaikanal lake road... CCTV footage of car hitting roadside shops shocking

 

கொடைக்கானலில் சாலையோர கடைகளின் மீது கார் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரிசாலை பகுதி எப்பொழுதுமே சுற்றுலாப் பயணிகள் நிரம்பி வழியும் பகுதியாக இருக்கும். எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும் இந்த பகுதியில் சாலை ஓரம் பல கடைகள் வைக்கப்பட்டிருக்கும். அதுவும் இன்று வார விடுமுறை என்பதால் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகள் கூடுவார்கள் என்பதற்காக அதிக சாலையோரக் கடைகள் இருந்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை வேளையில் வேகமாக வந்த கார் ஒன்று சாலையோர கடைகள் மற்றும் கடையில் நின்று கொண்டிருந்த வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் மீது மிக பலமாக மோதியது.

 

இந்த விபத்தில் குடியாத்தத்தைச் சேர்ந்த நவநீத் என்ற சுற்றுலாப் பயணிக்கும், சாலையோர வியாபாரியான வேளாங்கண்ணி என்பவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் மதுபோதையில் காரை இயக்கி விபத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கொடைக்கானல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

கொடைக்கானலில் காட்டுத்தீ; சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest fire in Kodaikanal;Warning to tourists

கோடை கால வெயில் வாட்டிவரும் நிலையில் வனத்துறை சார்பில் வனத்தில் வசிக்கும் விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டிகள் அமைக்கும் பணி ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இதேநிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் மறுபுறம் வனங்களில் ஏற்படும் காட்டுத்தீ விபத்துகள் வனத்துறைக்கு சவால் மிகுந்ததாக இருந்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில் வனத்துறை தீவிரமாக அதை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் தற்போது வறண்ட வானிலையே நிலவி வருகிறது. நேற்று முதல் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கிளாவரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டது. சுமார் 100 ஏக்கருக்கு மேல் காட்டுத்தீ படர்ந்துள்ளது. இதனால் கொடைக்கானலில் உள்ள மலைக்கிராமங்களில் பல இடங்கள் புகைமூட்டத்தில் சிக்கியுள்ளது. சாலை ஓரத்திலேயே காட்டுத்தீ மற்றும் புகை படர்ந்திருக்கும் காட்சிகள் அங்கு சுற்றுலா செல்வோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடை காலம் தொடங்கி அதிகப்படியாக சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வரும் நிலையில் காட்டுத்தீ சம்பவத்தால் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கையும் விடுத்துள்ளது. வனத்துறை மற்றும் மின்சாரத் துறை, தீயணைப்புத் துறையினர் ஆகிய துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் காட்டுத்தீயானது அணைக்கப்படுவதற்கான தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.