Skip to main content

காவலர்கள் மீது  தாக்குதல் சம்பவம்;  போலீசார் அதிரடி!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Incident of guards Police in action

சென்னை கண்ணகி நகர், சுனாமி நகர் குடியிருப்பு 64ஆவது பிளாக்கில் வசித்து வரும் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளவர் உமாபதி. இவர் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் இதற்கு முன்பு கைது செய்யப்பட்டிருந்தார். இந்த விசாரணைக்குப் பிறகு சிறைக்குச் சென்று விட்டு வெளியே வந்த அவர், அந்தப் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களைக் கடந்த மூன்று தினங்களுக்கு கத்தியால் தாக்கி இருக்கிறார். அதோடு கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததால் இரண்டு பேரை அவர் கத்தியால் குத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உமாபதியை நேற்று மாலை கைது செய்ய முயன்றனர். அப்போது அங்கிருந்த கற்களை எடுத்து இவரும், இவருடன் இருந்த அவருடைய நண்பர்கள் சிலரும் சேர்ந்து போலீசாரை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சியான பொதுமக்கள் போலீசாரைக் காப்பாற்ற முயன்றனர். உடனே அந்தக் கஞ்சா ஆசாமியுடன் அவரது கூட்டாளிகளும் அந்தப் பகுதி மக்களுக்கும் மிரட்டல் விடுத்தபடி அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

அதே சமயம் இந்த மூவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய  கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், பாபு மற்றும் சந்தோஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் முக்கிய குற்றவாளிகளான உமாபதியையும், அவரது நண்பரையும் தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்