கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள மேல்குமாரமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆ.அன்பழகன். இவருக்கு 63 வயதாகிறது. இதே ஊரைச் சேர்ந்த, இவரது வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் 16 வயது சிறுமி உள்ளார். இந்த சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டதுடன், கை கால்கள் பாதிக்கப்பட்டு நடக்க இயலாத நிலையிலும், வாய்ப் பேச இயலாத நிலையிலும் உள்ளார்.
கடந்த 03.07.2018 அன்று இந்த 16 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டில் தனது தம்பிகள் இருவருடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அன்பழகன் அந்தச் சிறுவர்களிடம் 'உங்க அக்காவுக்கு வைத்தியம் பார்க்க வேண்டும். நீங்கள் வெளியே போய் விளையாடுங்கள்' என்று வெளியே அனுப்பிவிட்டு, அதன்பிறகு சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அந்தச் சிறுமி சத்தம் எழுப்பவே அவரது துப்பட்டாவை வாயில் வைத்து அழுத்தியுள்ளார். ஆனாலும் சத்தம் கேட்டு ஓடி வந்த சிறுவர்கள் கத்தவே அக்கம்பக்கத்தவர்கள் ஓடிவந்து அன்பழகனை அடித்து விரட்டினர்.
இதுதொடர்பாக பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து கடலூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அரசு வழக்கறிஞர் கலாசெல்வி பாதிக்கப்பட்ட சிறுமிக்காக வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதி மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 63 வயது முதியவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.