அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஏற்கனவே செந்துறையை சேர்ந்த ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சையில் உள்ளார். மேலும் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்களில் நோய்த்தொற்று இருக்குமோ என்ற அடிப்படையில், அப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டு கரோனா தனிமை சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். இவர்களுக்கான மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் அனுப்பப்பட்டு அதற்கான முடிவுகள் தினசரி வந்து கொண்டுள்ளது.
![incident in ariyalur](http://image.nakkheeran.in/cdn/farfuture/k4R_-tpt2OFpkfUxLaHRFVB1W3GeSXrCZim3jH_AUg8/1586626407/sites/default/files/inline-images/adsfsdfdfdfdfdf.jpg)
அந்த வகையில், கடம்பூரைச் சேர்ந்த இளைஞர் கேரளாவுக்கு வேலைக்கு சென்றிருக்கிறார், அவர் கடந்த ஆறாம் தேதி தனது ஊருக்கு திரும்பி வந்தார். அப்போது அவருக்கு காய்ச்சல், இருமல் என தொந்தரவு இருந்துள்ளது. அந்த வகையில் அவருக்கு கரோனா தொற்று இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரை அரியலூர் அரசு மருத்துவமனை தனி சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இவருக்கான மருத்துவ பரிசோதனை அறிக்கை வருவதை மருத்துவர்கள் எதிர்பார்த்து இருந்தனர். கடந்த 10 நாட்களாக தனிப்பிரிவில் இருந்தபோது அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது என்னை ஊருக்கு அனுப்பி வையுங்கள் என்று மருத்துவர்களிடம் அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மருத்துவர்கள் அவரது மருத்துவ அறிக்கை வந்ததும் அதை பார்த்த பிறகு ஊருக்கு அனுப்புவதாக கூறியுள்ளனர். இந்தநிலையில் நேற்று மாலை அவர் சிகிச்சை பெற்ற அறையிலேயே தூக்கு மாட்டி தற்கொலை கொண்டார்.
![nakkheeran app](http://image.nakkheeran.in/cdn/farfuture/zS1lDr98LfWYfH4gHxAEwvw6BnJxtBeaxn6MfvEc0bY/1586627134/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif_108.gif)
இந்த சம்பவம் அந்த மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்களை பெரிதும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அப்போது நேரம் இரவு 7 மணி, அடுத்த ஒரு மணி நேரத்தில் அதாவது எட்டு மணிவாக்கில், அவரது மருத்துவ அறிக்கை மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது, அதில் கரோனா தொற்று ஏற்படவில்லை என்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த ஒரு மணி நேர பொறுமையை அவர் கடைபிடித்திருந்தால் அவரது உயிர் பிழைத்திருக்கும் என்கிறார்கள் அங்குள்ள மருத்துவர்கள்.
கரோனா தனிப் பிரிவில் உள்ளவர்களை மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் கவனித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.