வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை தயார் செய்வது தொடர்பாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பன்னீர்செல்வம், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை தயார் செய்வது தொடர்பாக தமிழகம் முழுவதும் விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் தரப்பில் பெறப்படும் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து திட்டங்களாக வடிவமைக்கப்பட்டு செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் கூட்டங்களில் விவசாயிகள் தரப்பில் விவசாய விளைபொருட்களைச் சந்தைப்படுத்துதல் தொடர்பாக பிரதான கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று விவசாய சாகுபடிக்கான கருவிகள் குறைந்த விலையில் வழங்குவதற்கு கோரிக்கைகள் வைக்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் முந்திரி முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில் அதற்கான கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகள் எடுத்துரைத்தனர். பிரத்யேகமாக முந்திரி தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கையும், பலாவிற்கு மதிப்புக்கூட்டல் மூலம் உற்பத்தியைப் பெருக்குவதற்கும் விற்பனையை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.
இந்தக் கருத்து கேட்பு கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் நெய்வேலி சபா.ராஜேந்திரன், விருத்தாச்சலம் ராதாகிருஷ்ணன், காட்டுமன்னார்குடி சிந்தனைச்செல்வன், விழுப்புரம் மாவட்டம் மயிலம் சிவகுமார், விக்கிரவாண்டி புகழேந்தி, கடலூர் மாநகர மேயர் சுந்தரி ராஜா, துணைமேயர் தாமரைச்செல்வன், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை உயரதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.