கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது மூலசமுத்திரம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பழச்சமுத்து. இவருடைய மகன் தமிழரசன் 57 வயது. இவர் மலேசியாவில் உள்ள ஒரு பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்துவந்துள்ளார். கடந்த மாதம் 28ஆம் தேதி அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் தமிழரசன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் மூலம் மத்திய அரசுக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்திருந்தனர்.
அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது மனைவி செல்வி, மகன் காமேஷ், மகள் கீர்த்திகா, அவரது உறவினர்கள் அனைவரும் உளுந்தூர்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏ மணிகண்ணனை நேரில் சென்று சந்தித்து முறையிட்டனர். எம்.எல்.ஏ மணிகண்ணன் உடனடியாக தமிழக சிறுபான்மை மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள செஞ்சி மஸ்தான் அவர்களிடம் இதுகுறித்து தகவல் அளித்துள்ளார். உடனே அமைச்சர் மஸ்தான் தமிழரசனின் உடலை தமிழகத்திற்கு கொண்டுவருவதற்கு மலேசியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதையடுத்து மலேசியாவில் இருந்து தமிழரசன் உடல் நேற்று முன்தினம் (25.05.2021) விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மூலசமுத்திரம் கிராமத்தில் கொண்டுவரப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவரது உடலுக்கு அமைச்சர் மஸ்தான் எம்.எல்.ஏ மணிகண்ணன், ஒன்றியச் செயலாளர்கள் வைத்தியநாதன், முருகன், ராஜவேல், வசந்தவேல் உள்ளிட்ட திமுக கட்சி பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது தமிழரசன் மனைவியிடம் 25,000 ரூபாய் உதவித்தொகையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார். இதுகுறித்து அவர் கூறும்போது, “தமிழரசனின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உதவி செய்யுமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டார். நேரில் அஞ்சலி செலுத்துவதற்கு வந்தோம். தமிழரசன் அவர் வேலை செய்த மலேசியாவில் உள்ள பேக்கரியில் இருந்து அனைத்து உதவிகளையும் உடனடியாக பெற்றுத் தருவதற்கு உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகிறது” என்று தெரிவித்தார். மலேசியாவில் இறந்தவரின் உடலை விரைவில் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கும், அமைச்சர் மஸ்தான், எம்.எல்.ஏ மணிகண்ணன், தமிழக அரசுக்கும் மூலசமுத்திரம் கிராமத்து மக்கள் நன்றி தெரிவித்தனர்.