Skip to main content

மெடிக்கலில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு! சிகிச்சையளித்தவர் தப்பி ஓட்டம்!  

Published on 07/05/2022 | Edited on 07/05/2022

 

Illegal abortion... The therapist escaped!

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகிலுள்ள கச்சிமைலூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(50). இவர் ராமநத்தம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து 'ஓம் சக்தி' என்ற பெயரில் மெடிக்கல் நடத்தி வருகின்றார். அத்துடன் இவர் தலைவலி, காய்ச்சல் என்று வருபவர்களுக்கு மருத்துவமும் பார்த்து வந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் கருக்கலைப்பு சிகிச்சையும் செய்து வருவதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் நேற்று காலை பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா மேட்டுபாளையம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் மற்றும் அவரது மனைவி அனிதா (வயது 27) தம்பதியினர் ஓம்சக்தி மெடிக்கலுக்கு வந்துள்ளனர். ஏற்கனவே இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக  அனிதா கர்ப்பம் அடைந்துள்ளார். இதனால் அனிதாவின் வயிற்றில் வளரும் குழந்தையை கருக்கலைப்பு செய்ய நினைத்து ராமநத்ததில் உள்ள முருகனின் மெடிக்கலுக்கு வந்துள்ளனர். முருகன் மெடிக்கல் பக்கத்தில் இதற்கு என்று தனியாக வைத்துள்ள அறைக்கு அனிதாவை அழைத்து சென்று கருக்கலைப்பு சிகிச்சை அளித்துள்ளார். இதில் அனிதா மயக்கம் அடைந்துள்ளார். அனிதாவிற்கு மாலை வரை மயக்கம் தெளியாமல் இருந்துள்ளது. மேலும் இரத்த போக்கும் அதிகரித்துள்ளது.

 

Illegal abortion... The therapist escaped!

 

இதனையடுத்து ஓம் சக்தி மெடிக்கல் உரிமையாளர் முருகன் அனிதாவையும் அவரது கணவரையும் தனது காரில் ஏற்றிக்கொண்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். மருத்துவமனையின் உள்ளே அனிதா மற்றும் அவரது கணவர்  இருவரையும் அனுப்பி வைத்து விட்டு முருகன் அங்கிருந்து தனது காரில் தப்பிச் சென்றுள்ளார். அனிதாவை அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்த மருத்துவர்கள், அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அனிதா இன்று உயிரிழந்துள்ளார். இதனையறிந்து அங்கு வந்த ராமநத்தம் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முருகனை தேடி வருகின்றனர்.

 

   

சார்ந்த செய்திகள்