
இளையராஜா-75 இசை நிகழ்ச்சியை தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்த தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உரிய ஆதாரம் இல்லாமல் கடைசி நேரத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தயாரிப்பாளர்கள் சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். அதே நேரத்தில், இசை நிகழ்ச்சியின் கணக்கு விவரங்களை மார்ச் மாதம் 3ம் தேதி தாக்கல் செய்யுமாறு பொதுக்குழுவில் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
வருகின்ற பிப்ரவரி -2 மற்றும் 3-ம் தேதிகளில் இசையமைப்பாளர் இளையராஜாவை கவுரவிக்கும் விதமாகவும், அவரின் 75- ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாகவும் ’இளையராஜா-75’ விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடக்கி வைக்கவுள்ளதாக தகவல்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சி தொடர்பாக தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்றும், இளையராஜாவுக்கு பாராட்டு விழா என்று கூறி விட்டு, நிதி திரட்ட தயாரிப்பாளர் சங்கம் முயற்சிப்பதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர்கள் சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோரால் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தரப்பில், நிகழ்ச்சி தொடர்பான ஒப்பந்தங்கள் தாக்கல் செய்யப்பட்டன. தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க நிதி திரட்டவே இளையராஜா நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும், அனைத்து உறுப்பினர்களையும் கலந்தாலோசித்தே முடிவெடுக்கப்பட்டதாகவும் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், 2017 - 18-ஆம் ஆண்டு கணக்கு வழக்குகள் பொதுக்குழுவில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்த தடை இல்லை என்று கூறியுள்ளனர். இசை நிகழ்ச்சியின் கணக்கு விவரங்களை மார்ச் மாதம் 3ம் தேதி பொதுக்குழுவில் தாக்கல் செய்யுமாறும் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.