சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் இன்று (30/04/2022) காலை 11.30 மணிக்கு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, மகளிருக்கு தொழில் பயிற்சி அளிக்கும் வகையில், அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்ட தையல் பயிற்சி நிலையத்தைத் தொடங்கி வைத்தார். பின்னர், தையல் இயந்திரத்தில் அமர்ந்து இயக்கிப் பார்த்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, "சேலத்தில் மின்வெட்டு பிரச்சனையால் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நிலக்கரியைக் கொள்முதல் செய்து தடையில்லா மின்சாரத்தை அரசு வழங்க வேண்டும். எனது வீட்டில் இன்று காலை 06.00 மணிக்கு மின்வெட்டு ஏற்பட்டு, 08.00 மணிக்குத் தான் மின்சாரம் வந்தது. மின்வெட்டு அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் தடையில்லா மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. தற்போது அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது" என்றார்.
இந்த விழாவில், அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளராகவும், கட்சியின் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளராகவும் உள்ள இளங்கோவன் விழாவைப் புறக்கணித்தது அக்கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி வகித்துவந்த சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவி அண்மையில்தான் இவருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.