ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் மேற்கு மலைப் பகுதியில் உள்ள தம்புரெட்டி மலை கிராமத்தை சேர்ந்த 15 பேர் 8 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை அந்தியூர் அருகே உள்ள வட்டகாடு என்ற இடத்திற்கு தோட்டத்திற்கு கூலி வேலைக்காக வாடகை கார் ஒன்றில் வந்துள்ளனர்.
அந்த வாகனத்தில் வரும்போது மணியாச்சி பள்ளம் என்ற இடத்தில் வாகனம் இறக்கத்தில் இறங்கி கொண்டிருக்கும்போது திடீரென காரில் பழுது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த கார் சாலையிலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இதனை கண்டு அங்கு பின்னால் வந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் சம்பவம் குறித்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் மூலம் காயம் அடைந்தவவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சம்பவம் நடந்த இடம் அடர்ந்த வனப்பகுதி என்பதால் வெகு நேரம் அவர்களை மீட்டு வருவதில் காலதாமதம் ஏற்பட்டது.இந்த விபத்தில் மலை பகுதிகூலி தொழிலாளர்களான தம்புரெட்டி கிராமத்தை சேர்ந்த தேவராஜ், சிக்கணன், தொட்டப்பி, ஜோகன் ஆகிய 4 பேர் அந்த சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர், மற்ற 11 பேரில் 3 பேர் பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 8 பேர் அந்தியூர் அரசு மருத்துவமனையில் தற்போது முதலுதவி சிகிச்சை பெற்று தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது ஒரு காரில் 15 பேர் என அதிகளவில் ஆட்கள் ஏற்றி வந்ததன் காரணமாகவே, வாகனம் கட்டுப்பாட்டை இழந்தபோது, வாகனத்தில் இருந்து வெளியில் வரமுடியாமல் 4 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் பள்ளத்தில் கார் கவிழ்ந்து இருந்தால் அதிக அளவு உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என்றனர்.
இந்த சம்பவம் குறித்து பர்கூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மலை கிராமத்தில் உள்ள ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது அந்த கிராமத்தில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.