![pon manicavel](http://image.nakkheeran.in/cdn/farfuture/_IRoNE0gspDsqzVKBx9fKBSsTb7ec9iyo0dKN5xINaQ/1543498232/sites/default/files/inline-images/pon-manicavel_0.jpg)
ரயில்வே மற்றும் சிலை தடுப்புப்பிரிவு ஐ.ஜி.யான பொன்.மாணிக்கவேல் நாளையோடு பணி ஓய்வு பெறுகிறார். அதனால் இன்று சென்னை அயனாவரத்தில் ரயில்வே காவல்துறை சார்பில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலுக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஐ.ஜி தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மேலும் சில அறிவுரைகளையும் வழங்கினார். ஒரு குற்றம் நடக்கிறதென்றால் அந்தப் பகுதியில் இறங்கி முழுமையாக அலசி, ஆராய்ந்து விசாரிக்க வேண்டும். தவறு உறுதியானால் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக நீதிமன்றத்தில் அனுமதி பெற்று குற்றம் புரிந்தவரை கைது செய்யவேண்டும்.
உடனடியாக கைது செய்யக் கூடிய சம்பவங்கள் மற்றும் சட்டங்களை காவலர்கள் கட்டாயம் அறிந்திருக்கவேண்டும். அதன்படி துரிதமாக செயல்படவும் வேண்டும். யார் மீதும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யக் காவலர்கள் பயப்படக்கூடாது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அளிக்கும் வாக்குமூலத்தை ஒரு காகிதத்தில் காவலர்கள் எழுத வேண்டும். அப்போது மட்டுமே அது சாட்சியாக ஏற்றுக்கொள்ளப்படும், இல்லையென்றால் அது வாய்வார்த்தையாக போய்விடும், குற்றவாளிகளை அடித்து உண்மையை வரவழைக்க முடியாது. நான் கையாண்ட ஒரு வழக்கில் குற்றவாளியை அழைத்து எனக்குக் கொடுக்கப்பட்டிருந்த அதேபோல் இருக்கையை அவனுக்கும் கொடுத்தேன். எனக்கு அளித்த உணவு போன்ற அனைத்து வசதிகளையும் அவனுக்கும் செய்துகொடுத்தேன். பிறகு அவன் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி இதனால் பிற்காலத்தில் கிடைக்கும் தண்டனைகள் பற்றி விளக்கி அவனுக்கு 15 நிமிடங்கள் கால அவகாசம் அளித்தேன்.
இதையடுத்து, அவனே தானாக வந்து தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டான். காவலர்கள் நினைத்தால் 6 மாதத்தில் ஒரு குற்றவாளியை திருத்த முடியும். போலீஸாருக்கு பெரும் கடமை இருக்கிறது. அதை உணர்ந்து அனைவரும் செயல்படவேண்டும். என்னுடைய பணியை நேர்மையான அதிகாரிகளையும், இளைஞர்களை நம்பி விட்டுச் செல்கிறேன். என்று கூறினார். சிலைகடத்தல் தடுப்புப் பிரிவிற்கு பொன்.மாணிக்கவேல் தலைமையேற்றபின்பு பல அரிய சிலைகள் மீட்கப்பட்டது. வெளிநாட்டிலிருக்கும் சிலைகளும் மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.