
பீகார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் -பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தேசிய கீதம் இசைத்த போது சிரித்தப்படியும் பேசியபடியும் நின்றதால் நிதிஷ் குமார் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பாட்னாவில் பாடலிபுத்ரா விளையாட்டு அரங்கத்தில் செபக்தக்ரா உலகக் கோப்பை போட்டியின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில், பீகார் முதல்வரான நிதிஷ் குமார் கலந்து கொண்டார். இந்த விழாவின் போது தேசியக் கீதம் இசைக்கப்பட்டது. அப்போது நிதிஷ் குமார், தனது அருகில் நின்ற முதன்மைச் செயலாளரான தீபக் குமாருடன் சிரித்தப்படி பேசிக் கொண்டிருந்தார். மேலும், அதிகாரியின் தோளில் தட்டி அவரது கவனத்தை ஈர்க்க முயன்றார். ஒரு கட்டத்தில், மேடையில் இருந்த அனைவரும் புகைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையாகியுள்ளது. தேசியக் கீதத்துக்கு உரிய மரியாதை தராமல், மாநில முதல்வரே இழிவுப்படுத்தியதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘குறைந்தபட்சம் தேசிய கீதத்தை அவமதிக்காமல் இருங்கள் முதல்வரே. இளைஞர்கல், மாணவர்கள், பெண்கள் என ஒவ்வொரு நாளும் நீங்கள் அவர்களை அவமதிக்கிறீர்கள். சில நேரங்களில் நீங்கள் மகாத்மா காந்தியின் தியாக நாளில் கைதட்டி அவரது தியாகத்தை கேலி செய்கிறீர்கள்., சில சமயங்களில் நீங்கள் தேசிய கீதத்தில் கைதட்டுவீர்கள்.
நீங்கள் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பதை உங்களுக்கு நான் நினைவூட்டுகிறேன். சில நொடிகளில் கூட மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நீங்கள் நிலையாக இல்லை. நீங்கள் இந்த மயக்க நிலையில் இருப்பது நமது மாநிலத்திற்கு மிகுந்த கவலையளிக்கும் விஷயம். மீண்டும் மீண்டும் இது போன்று பீகாரை அவமதிக்காதீர்கள்’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.