பெரம்பலூரில் 2006ல் பாரதிதாசன் பல்கலை கழகத்தின் உறுப்பு கல்லூரியாக துவக்கப்பட்டு செயல்பட்டது. ஆண் பெண் இருபாலரும் படிக்கும் இந்த கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு 24 பாட திட்டங்கள் கொண்டு வரப்பட்டு நடத்தப்பட்டு வந்தன. உறுப்பு கல்லூரியாக இருந்ததை இந்த ஆண்டு அரசு கல்லூரியாக மாற்றி உத்தரவிட்டது. இரண்டு ஷிப்ட்டு முறையில் காலை மதியம் என 3000 பிள்ளைகள் படிக்கின்றனர். ஆனால் இந்த ஆண்டு 24 பாடத்திட்டத்தில் இருந்து பிஎஸ்சி மேக்ஸ், பி.சி.ஏ., பி.ஏ. ஹிஸ்ட்ரி. MA தமிழ் - ஆங்கிலம், கணக்கு MPA, MCA உட்பட 11 பாட திட்டங்களை நீக்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது உயர்கல்வி துறை.
இந்த கல்லூரியில் ஏழை மற்றும் நடுத்தர குடும்ப பிள்ளைகள் தான் படித்து வந்தனர். விருப்ப பாடங்களை படிக்க கூடாது என நீக்கியுள்ளதை கண்டு மாணவ மாணவிகள் கல்லூரி அமைந்துள்ள குரும்பலூரில் இன்று காலை 11 மணியளவில் சாலை மறியல் செய்தனர். இதையடுத்து பெரம்பலூர் போலீஸ் டிஎஸ்பி., ரவீந்திரன் தலைமையில் போலீசார் வந்தனர்.
போலீஸ்சார் சமாதானப்படுத்தி கல்லூரி வளாகத்தில், கல்லூரி முதல்வர் ஜானகிராமன் மற்றும் மாணவர்கள் தரப்பில் செந்தில், மணிகண்டன் பிரவீன்-பிரிதா ஆகியோர் கலந்து கொண்டபேச்சுவார்த்தை நடந்தது. அப்போது முதல்வர் ஜானகிராமன், நீக்கப்பட்ட பாட பிரிவுகளை சேர்க்க கோரி உயர் கல்வி துறைக்கு கல்லூரி சார்பாக பரிந்துரை செய்யப்படும் என்றார்.
மீண்டும் பாடத்திட்டத்தை அரசு கொண்டு வருமா? அத்தைக்கு மீசை முளைத்த கதை தான் என்கிறார்கள் மாணவ மாணவிகள். பாரதிதாசன் பல்கலை கழக கட்டுப்பாட்டில் உள்ள 11 கல்லூரிகள் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள அரசுகல்லூரிகளிலும் மேற்ப்படி பாடத்திட்டம் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. மேலே சொல்லப்பட்ட பாடங்களை கற்றுத்தரும் கெளரவ பேராசியர்கள் (பெரம்பலூரில் மட்டும் 22 பேர்) பணியை இழக்கப் போகிறார்கள். இதே போல் தமிழகம் முழுவதும் 1000க்கணக்கானவர்களை அரசு வெளியேற்ற உள்ளது. காரணம் அரசின் நிதிச்சுமை - அடுத்து அரசு கல்லூரியில் படிக்க விருப்பமான பாடங்கள் இல்லை என்பதால், பிள்ளைகள் தனியார் கல்லூரியை நோக்கி மறைமுகமாக துரத்துகிறது. அரசு தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாக செயல்படுகிறது. இதனால் ஏழை பிள்ளைகளை பெற்ற பெற்றோர் ஒன்று கடன்காரர்கள் ஆவார்கள், இல்லையேல் அவர்கள் பிள்ளைகள் படிக்க முடியாமல் ஆடு மாடு மேய்க்கும் நிலையை எடப்பாடி அரசு உருவாக்கியுள்ளது என்றனர்.