திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வளநாடு பகுதியில் அரசுப் பள்ளியில் மதிப்பெண் சான்றிதழ் பெற வந்த மாணவர்களிடம் 500 ரூபாய் வேண்டும் என பள்ளியின் தலைமை ஆசிரியர் பேசும் பேசும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வளநாடு பகுதியில் உள்ள கோவில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் ஸ்ரீதரன். கடந்த 2019-20 ஆம் கல்வியாண்டில் கரோனா காலத்தில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் நான்கு பேர் மாற்றுச்சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் பெற சென்றுள்ளனர். அனைவரும் தேர்ச்சி என கரோனா காலத்தில் கல்வித்துறை அறிவித்து சான்றிதழ்கள் வழங்கி இருந்தாலும் முந்தைய தேர்வில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பள்ளி நிர்வாகமே மதிப்பெண் சான்றிதழ் வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
ஐ.டி.ஐயில் சேர்வதற்காக இந்த நான்கு மாணவர்களும் பள்ளியை அணுகி தலைமை ஆசிரியரிடம் மதிப்பெண் சான்றிதழ்களை கேட்ட பொழுது அனைத்து பாடங்களிலும் பாஸ் ஆனால் 500 ரூபாய் கொடுக்க வேண்டும் அல்லது ஏ4 சைஸ் பேப்பர் பண்டல் இரண்டு வாங்கி வரவேண்டும் எனக் கூறியுள்ளார்.
கையில் பணம் இல்லாத அந்த மாணவர்கள் ஒரே ஒரு ஏ4 சைஸ் பேப்பர் பண்டலை மட்டும் வாங்கி வந்து கொடுத்துள்ளனர். ஆனால் ஆத்திரமடைந்த தலைமையாசிரியர் 'எருமை மாடு' என திட்டியதோடு 'நீங்கள் ஐ.டி.ஐயும் படிக்க வேண்டாம் மண்ணாங்கட்டியும் படிக்க வேண்டாம்' என அனாவசியமாக பேசும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.