அண்ணாவைப் பற்றித் தவறாகப் பேசினால் நாக்கு துண்டாகும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.
அண்மையாகவே அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே முட்டல் மோதல் ஏற்பட்டு வருகிறது. அண்மையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாக வெளியான கருத்துக்களைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி. சண்முகம் ஆகியோர் அண்ணாமலையை செய்தியாளர்கள் மத்தியில் வறுத்தெடுத்தனர். அந்த பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு தற்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி முயற்சிகள் பலமாகி வருகிறது. இந்தநிலையில் அண்ணாவைப் பற்றி அண்ணாமலை தவறாகப் பேசியதாக செய்திகள் வெளியாக, அதற்கும் தற்பொழுது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எதிர்வினை ஆற்றி வருகின்றனர். அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாவைப் பற்றித் தவறாகப் பேசிய அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ''அண்ணாவைப் பற்றி கேலி பேசுகிறார்கள். ஒரு இறந்த தலைவரைப் பற்றி கேலி கிண்டல் செய்து பேசுகிறவன் இழிவானவன். இழிவாகப் பேசுவது இழி பிறவி தான். தமிழகத்தில் எந்த அரசியல்வாதியும் சரி இன்னைக்கும் டாக்டர் கலைஞர் என்று தான் சொல்கிறோம். கலைஞர் இருக்கும் பொழுது நாங்கள் பேசியிருப்போம். ஆனால் அவர் மறைந்துவிட்டார். மறைந்த தலைவர்களை மதிக்க வேண்டும். மதிக்கத் தெரியாதவர்களைத் தமிழ் சமுதாயம் மிதிக்கத் தான் செய்யும். அரசியலில் நீ எங்கேயோ இருக்கலாம். ஆளுங்கட்சியின் தற்காப்பில் பேசலாம். ஆனால் அண்ணாவைப் பற்றி யார் தவறாகப் பேசினாலும் அவர்களுடைய நாக்கு துண்டாகி விடும். அப்படிப்பட்ட கொள்கை மறவர்கள் இங்கு இருக்கிறார்கள்'' என்று ஆவேசமானார்.