திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் திருக்கோயிலில் வருடம் தோறும் மாசி மாதம் திருவிழா நடப்பது வழக்கம். அதேபோல் வருடந்தோறும் ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் திண்டுக்கல் மாநகரில் உள்ள முக்கிய வீதிகளில் கோட்டை மாரியம்மன் வீதி உலா வருவது வழக்கம். இந்த ஆண்டும் கோட்டை மாரியம்மன் வீதி உலா நடைபெற்றது. வீதி உலாவின் போது அப்பகுதியில் உள்ள பக்தர்கள் அம்மனுக்கு மஞ்சள் நீர் ஊற்றி வரவேற்று தங்கள் வீடுகளில் முன் தேங்காய், பழம் வைத்து அபிஷேகம் செய்கிறார்கள்.
அப்படி செய்யும் பொழுது பக்தர்கள் விருப்பப்படி பரிவட்டம் கட்டுகிறார்கள். அதற்கு 50 ரூபாய்க்கு ரசீதும் கொடுத்து விடுகிறார்கள். இருந்தாலும் உடன் வரும் பூசாரிகள் அபிஷேக தட்டுக்கு காணிக்கை போடுங்கள் என்று பக்தர்களிடம் கேட்கிறார்கள். அப்பொழுது பக்தர்கள் தட்டில் பத்து ரூபாய், ஐந்துரூபாய் போடுகிறார்கள். அப்படி பணம் போடும் பக்தர்களுக்குப் பெயருக்கு கையில் கொஞ்சம் பூ கொடுக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான பக்தர்களுக்கு அது கூட கொடுப்பதில்லை. ஆனால் தட்டில் 50 ரூபாய்,100 ரூபாய் போட்டால் உடனே அவர்களுக்கு மாலை போட்டு மரியாதை பண்ணுகிறார்கள்.
இதனால் பக்தர்கள் முகம் சுளித்து வருகிறார்கள். ஆனால் அம்மன் வீதி உலா பெரும்பொழுது கோயில் சார்பாக உண்டியலும் கொண்டு வருகிறார்கள். அதற்கு பக்தர்கள் காணிக்கை போடச் சொல்வதைவிடத் தட்டில் பணத்தைப் போடுங்கள் என்று தங்கள் பாக்கெட்டை நிரப்பிக் கொள்வதற்காக பூசாரிகள் பணம் கேட்பது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஆடி மாதத்தில் அம்மன் வீதி உலா வருவதன் மூலம் பூசாரிகளும் ஒரு வருமானத்தைப் பார்த்து வருகிறார்கள். இதை உடன் வரும் பரம்பரை அறங்காவலர் குழுவினரும் கண்டு கொள்ளாத நிலையில், அறநிலையத்துறை அதிகாரிகளாவது பக்தர்களிடம் பணம் பறிக்கும் பூசாரிகள் மேல் நடவடிக்கை எடுப்பார்களா? என்ற கோரிக்கை வைக்கிறார்கள் பொதுமக்கள்.