Skip to main content

சுவாசிக்க சுத்தமான காற்றை கேட்டால் துப்பாக்கி குண்டுகள் பாயுமா எடப்பாடியாரே!

Published on 23/05/2018 | Edited on 23/05/2018
guns


தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரக்கூடிய ஸ்டெர்லைட் ஆலையானது கடந்த 1993ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்ட முதல் சட்டரீதியாக தொடர்ச்சியாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் விரிவாக்க பணிகள் நடைபெற இருப்பதாக அன்மையில் செய்திகள் வெளியாகவே கடந்த பிப்ரவரி மாதம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் உண்ணாவிரத போராட்டம், ஆர்ப்பாட்டம் என பல வகைகளில் போராட்டம் நடைபெற்றது. பிப்.24 ஆம் தேதி நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தார்கள். அந்த கூட்டத்தை பார்த்து அரசும், ஸ்டெர்லைட் நிர்வாகமும் ஆடிப்போனது.

அதன் பின்னர் தொடர்ச்சியாக 100 நாட்கள் போராட்டம் நடைபெற்றது.  தமிழக அரசு சார்பில் சுற்றுசூழல் அமைச்சர் அறிக்கை வெளியிட்டார். அதுவும் கூட மக்களின் பிரச்னையை பிரதிபலிக்கவில்லை நிறுவனத்திற்கு ஆதரவாகவே இருந்தது. அது குறித்து முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று மட்டுமே அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவித்தார். ஆனால் 100 நாட்கள் கடந்தும் கூட எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 100 நாட்கள் போராட்டத்தில் மக்கள் கேட்டது "எங்களுக்கு குடிக்க சுத்தமான தண்ணீர் வேண்டும்", "சுவாசிக்க சுத்தமான கற்று வேண்டும்", ’நிம்மதியாக வாழ வேண்டும்" என்பது மட்டும் தான்.
 

kali


100 நாட்கள் போராட்டத்தில் இதுவரை மக்களிடம் ஆலை மூடப்படும் என்று நம்பிக்கையாக ஒரு வார்த்தையாவது இந்த அரசு சொல்லி இருக்கிறதா? மூச்சு விட முடியாமல் சிறு குழந்தையும், வயதானவர்களும் எப்படி அந்த இடங்களில் வாழ்ந்தார்கள் என்று ஒரு முறையாவது நேரில் பார்த்தது உண்டா? உணர்ந்தது உண்டா? பல்லாயிரக்கணக்கான மக்கள் சுகாதாரமற்ற முறையில் குடிக்கக் கூடிய தண்ணீரை ஒரு முறையாவதும் நீங்கள் குடித்தது உண்டா எடப்பாடியாரே? எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் மாவட்ட மாவட்டமாக சிறப்பான அரசாக விளங்குவதாக தம்பட்டம் அடித்து கொண்டீர்கள் அதே நேரத்தில் நீங்கள் சென்ற மாவட்டங்களில் போராட்டம் நடத்திய மக்களை ஒருமுறையாவது நேரில் சந்தித்து பேசி இருக்கீர்களா?

100 நாட்கள் நடைபெற்ற அமைதியான போராட்டத்தை பார்த்து உலக தமிழர்களே போராட்டத்தில் இறங்கினார்கள். உங்கள் அரசுக்கு பிரச்னையின் தீவிரத்தை வலியுறுத்தவே ஒவ்வொரு முறையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி சென்று அரசுக்கு உணர வைக்க முயற்சி செய்தார்கள். ஆனால் நீங்களோ எந்த விதமான விதிமுறைகளையும் பின்பற்றாமல் தடியடி, துப்பாக்கி சூடு என்று போராட்ட ஒருங்கிணைப்பாளர்களை குறி பார்த்து சுட்டு வீழ்த்தியுள்ளீர்கள். சுவாசிக்க சுத்தமான காற்றை கேட்டால் துப்பாக்கி குண்டுகள் பாயுமா எடப்பாடியாரே? இது தான் மக்கள் ஆட்சியா?
 

po


நீங்கள் உண்மையாகவே மக்களுக்கான ஆட்சி நடத்துபவராக இருந்தால் துப்பாக்கி சூட்டுக்கு பின்னர் தூத்துக்குடி விரைந்திருக்க வேண்டும் ஆனால் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எந்த அமைச்சரும், எம்.எல்.ஏக்களும் இதுவரை அங்கு செல்லவில்லை. மக்களுக்கான அரசு என்று சொல்லி கொண்டு மக்களின் பிரச்சனைகளை காதுகளில் போட்டு கொள்ளாமல் செயல்படும் அரசை மக்களே தூக்கி அடிப்பார்கள் என்பதை இந்த உலகம் ஒவ்வொரு தேர்தலிலும் பார்த்து கொண்டு தான் இருக்கிறது.

சார்ந்த செய்திகள்