Skip to main content

'மாவட்ட நிர்வாகத்தை வைத்து மக்களை அச்சுறுத்தினால் வேடிக்கை பார்க்கமாட்டோம்' - வேல்முருகன் பேட்டி

Published on 22/12/2022 | Edited on 22/12/2022

 

'If we threaten the people with the district administration, we will not be amused' - Velmurugan interview

 

வருகிற 26ஆம் தேதி என்.எல்.சிக்கு நிலம், வீடுகள் கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலை உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலியில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக த.வா.க வேல்முருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.  மாநில நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், நா.பாலு, வே.க.முருகன், ஞானசேகரன், ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் எ.நா.அறிவழகன் வரவேற்றார். தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ சிறப்புரையாற்றினார்.

 

இக்கூட்டத்தில் விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிதாகத் தனி மாவட்டம் அறிவிக்க வேண்டும். விருத்தாசலம் மணிமுத்தாற்றில் தேங்கியுள்ள குப்பைக் கழிவுகள் மற்றும் கழிவு நீரை அகற்றி தூய்மைப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளிப்பாடி - காவனூர் இடையே வெள்ளாற்றில் உயர்மட்ட பாலம் அமைத்துத் தர வேண்டும், வீடு தீப்பற்றி எரிந்தால் நிவாரண நிதியாக ரூபாய் 5 ஆயிரம் தருவதை ரூபாய் 25,000 ஆக உயர்த்தித் தர வேண்டும்,  விருத்தாசலம் பகுதியில் அமைந்துள்ள தனியார் சர்க்கரை ஆலை நிறுவனங்கள் விவசாயிகளுக்குத் தர வேண்டிய 75 கோடி ரூபாய் நிலுவைத் தொகை பணத்தை உடனடியாக பெற்றுக் கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

'If we threaten the people with the district administration, we will not be amused' - Velmurugan interview

 

இக்கூட்டத்தின் முடிவில் தி.வேல்முருகன் எம்எல்ஏ செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர், " வருகிற 26 ஆம் தேதி என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம், வீடுகளைக் கொடுத்த மக்களுக்கு நிரந்தர வேலை, ஏக்கருக்கு ஒரு கோடி இழப்பீடு உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலியில்  பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. என்.எல்.சி நிர்வாகம் இந்த மாவட்ட மக்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு பேச்சுவார்த்தை மூலம் சுமூக உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். என்.எல்.சி நிர்வாகம் காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தை வைத்து மக்களை அச்சுறுத்தினால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேடிக்கை பார்க்காது. நெய்வேலியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், ம.தி.மு.க துரை வைகோ, மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, காங்கிரஸ் எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன், மக்கள் அதிகாரம் வழக்கறிஞர் ராஜி மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகளின்  தலைவர்கள், பிரதிநிதிகள், என்.எல்.சியால் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட இருக்கின்ற 53 கிராம மக்கள், விவசாயிகள் பங்கேற்கிறார்கள். விவசாயிகளின் உரிமையை மீட்டெடுக்கவும், மண்ணின் மைந்தர்களுக்கும், தமிழர்களுக்கும் 90 சதவீத வேலைவாய்ப்பினை உறுதி செய்ய வேண்டி எனது கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் ஆகியோர் இப்பிரச்சனையை தீர்க்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு நன்றி. ஆனால் விவசாயிகளின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் நிலத்தைக் கையகப்படுத்த விடமாட்டோம். சாகுபடி பணிகள், அறுவடை பணிகள் நடைபெறும்போது என்.எல்.சி நிர்வாகம் நில அளவீடு செய்யக்கூடாது. நிலத்தை பாழ்படுத்தக் கூடாது. என்.எல்.சி நிர்வாகம் நிலத்தை பாழ்படுத்த விடமாட்டோம் எனத் தமிழக முதல்வர் எனக்கு உறுதியளித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இன்ட்கோசர்வ் சொசைட்டியில் உள்ள தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.

 

ஒவ்வொரு முறையும் என்.எல்.சி நிறுவனத்தின் மூலம் பிரச்சனைகள் ஏற்படும்போது ஒப்பந்தங்கள் போடப்படுகிறது. ஆனால் விவசாயிகள், போராட்டங்களில் ஈடுபடுபவர்களிடம் போடப்படும் ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. கொடுத்த வாக்குறுதிகளை என்.எல்.சி நிர்வாகம் நிறைவேற்றுகிறதா என அமைச்சர், எம்.எல்.ஏக்கள், விவசாயிகள் ஆகியோர் கொண்ட குழுவை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும். நான் கலந்துகொண்டு போட்ட 2  ஒப்பந்தங்களை இதுவரை நிறைவேற்றவில்லை. விவசாயிகளை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை, மக்கள் தாங்களாக நிலத்தை முன்வந்து கொடுக்கும் வரை நிலத்தில் என்.எல்.சி நிர்வாகம் கால் வைக்கக் கூடாது. அதனையும் மீறி காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு வந்தால் அடுத்தடுத்த போராட்டங்களை மிக வேகமாகத் தீவிரமாக நான் முன்னெடுப்பேன்.

 

ஒவ்வொரு இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளின் விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. ஆனால் அவை முறையாக பாதுகாக்கப்படாமல் விளைபொருட்கள் மழையில் நனைந்து முளைத்து வருகின்றன. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் விளைபொருட்களை பாதுகாக்க ஆங்காங்கே கிடங்குகள் அமைத்துத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கொடுக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் மாவட்ட மாநகராட்சிகளில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மட்டுமே இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள். பகுதி வாரியாகவும் பணிபுரியும் பத்திரிகையாளர்களையும் நல வாரியத்தில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறினார்.

 

இக்கூட்டத்தில் விருத்தாசலம் நகரச் செயலாளர் பி.ஜி.சேகர், ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், தியாகராஜன், தங்கமணி, தங்கவேல், சிலம்பரசன், சுரேந்தர், பன்னீர்செல்வம், சங்கர் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்