Skip to main content

'தாமதப்படுத்திக் கொண்டிருந்தால் மீண்டும் பிரச்சனை தான் உருவாகும்' - போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர்  

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
'If we keep delaying, the problem will arise here again' - Transport Workers' Union interviewed

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் மீண்டும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ஐந்து கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று முடிவு எட்டப்படவில்லை. இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாததால் மீண்டும் பிப்ரவரி 21 ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு போக்குவரத்து சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ‘ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தையின் போது ஏழாம் தேதி பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று நிர்வாகம் கேட்டுக்கொண்டது. அதற்கு காரணம், உச்சநீதிமன்றத்தில் ஓய்வு பெற்றவருடைய பஞ்சப்படி தொடர்பான வழக்கு வருகிறது என்று சொன்னார்கள். அந்த அடிப்படையில் ஏழாம் தேதி அடுத்த பேச்சுவார்த்தை என்று தொழிலாளர் துறையும் சொன்னது. நேற்று உச்சநீதிமன்ற தீர்ப்பு மிகத் தெளிவாக ஓய்வூதியர்கள் உடைய நிலுவையில் இருக்கக்கூடிய பஞ்சப்படியை எல்லா வகையிலும் அமல்படுத்த வேண்டும் என்று  தீர்ப்பு கொடுத்துவிட்டது. ஆகவே அரசு உடனடியாக எந்த தாமதமும் இல்லாமல் ஓய்வூதியர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கக்கூடிய பணத்தையும், மற்றவர்களுக்கு நிலுவையில் இருக்கின்ற பணத்தையும் உடனடியாக செட்டில் செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம். தாமதப்படுத்தி கொண்டிருந்தால் மீண்டும் இங்கு பிரச்சனை தான் உருவாகும் என்று அவர்களிடம் சொல்லி இருக்கிறோம். இதை அரசுக்கு எடுத்துச் சென்று தீர்க்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள்'' என்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

பேருந்துகள் சேதம் குறித்து தொடர் புகார்கள்; போக்குவரத்துத் துறை கெடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
transport department action on Frequent complaints about damage to buses

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து புதிய பேருந்துகளை தமிழ்நாடு அரசு வாங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

அதுமட்டுமல்லாமல், பேருந்துகள் சேதம் குறித்து தொடர்ச்சியாக புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொடர் புகார்களை அடுத்து, போக்குவரத்துத் துறை அனைத்து பேருந்துகளுக்கும் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், ‘48 மணி நேரத்தில் அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும். அதன் ஆய்வு தொடர்பான அறிக்கையை போக்குவரத்து செயலாளரிடம் சமர்ப்பிக்க மேலாண் இயக்குநர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது’ எனத் தெரிவித்துள்ளது. 

Next Story

‘கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்’ - போக்குவரத்துத் துறை தகவல்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Transport Department Information for Additional Special Bus Operation

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மக்கள் தொடர்பு இணை இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “இன்று வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள் (26/04/2024) என்பதாலும், நாளை சனிக்கிழமை (27/04/2024) மற்றும் நாளை மறுநாள் ஞாயிறு (28/04/2024) என வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) 280 பேருந்துகளும், நாளை (27/04/2024) 355 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதே போன்று சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) மற்றும் நாளை (27/04/2024) 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இன்று அன்று 280 பேருந்துகளும் மற்றும் நாளை 355 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 55 பேருந்துகளும் மேற்கண்ட இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதி நாளான இன்று 9 ஆயிரத்து 276 பயணிகளும், நாளை 5 ஆயிரத்து 796 பயணிகளும் மற்றும் நாளை மறுநாள்  8 ஆயிரத்து 894 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் செயலிமூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.