காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 99வது கூட்டம் காணொளி காட்சி வாயிலாக கடந்த 11 ஆம் தேதி (11.07.2024) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், 'தமிழகத்திற்கு ஜூலை 12 ஆம் தேதி (12.07.2024) முதல் வரும் 31ஆம் தேதி (31.07.2024) வரை நாள்தோறும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்' எனக் கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்திருந்தது. மேலும் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு செல்லும் நீரின் அளவு 1 டிஎம்சியாக இருப்பதைக் கர்நாடக அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அதேசமயம் கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி தற்போது வரை விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மைசூர், குடகு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளிலும் கடலோர மற்றும் மலை மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பொழிவதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் பி.ஆர்.பாட்டிலை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன், ''எல்லோரும் சொல்கிறார்கள் காங்கிரஸ் உங்களுடைய கூட்டணிக் கட்சி தானே கேட்கலாமே என்று சொல்கிறார்கள். பேசிப் பேசி, 36... 38... தடவை பேசி, இனி பேசி பயனில்லை என்று வந்துள்ளது. பி.வி.சிங் எனக்காக இன்னொரு தடவை பேச வைத்து, அப்பொழுதும் முடியாமல் இனிமேல் பேசுவதால் எந்த பயனும் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் அஃபிடவிட் போட்டதனால் தான் டிரிபியூனல் அமைக்க முடிந்தது. ஆகையால் இப்போது பேசப் போனால் உடனே நாம் கேஸ் போட்டுள்ள உச்சநீதிமன்றத்தில் அவர்கள் என்ன சொல்வார்கள் 'சார் நாங்க பேசி தீர்த்துக்கிறோம்' என்று சொல்வார்கள். அப்புறம் க்ளோஸ் ஆகிவிடும். காவிரியில் தடையின்றி தண்ணீரை திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளோம். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஒருபோதும் கர்நாடகா காவிரி நீரைத் திறந்ததே கிடையாது. மேகதாது, காவிரி பிரச்சனை குறித்து ஜல்சக்தித்துறை அமைச்சரிடம் தெளிவாகப் பேசியுள்ளோம்'' என்றார்.