சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில்,
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ்-திமுக கூட்டணிதான் காரணம். இப்போது பேசுகிறவர்கள் மத்தியிலும், மாநிலத்திலும் இவர்கள் ஆட்சியில் இருக்குபோது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
இன்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் உறுதியாக சொல்கிறார் எந்த காரணத்தை கொண்டும் 7 பேரை விடுதலை செய்யக்கூடாது என்று. அதேபோல் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பத்திரிகை தொடர்பாளர் சொல்கிறார் எந்த காரணத்தைக்கொண்டும் விடுதலை செய்யக்கூடாது என்று. இந்த 7 உயிர்களை வைத்து அரசியல் நடத்தாதீர்கள். அவர்கள் சிறையில் நிம்மதியாக இருக்கிறார்கள் என்றால் சிறையில் நிம்மதியாக இருக்கட்டும். ஆளுநரின் முடிவினுடைய அடிப்படையில் வெளியே வருவதாக இருந்தால் வந்துகொண்டு போகட்டும். தயவுசெய்து இதை பகடை காயாக பயன்படுத்தி அரசியல் செய்யாதீர்கள்.
அந்த 7 பேரின் இந்த நிலைக்கும் நூற்றுக்குநூறு காரணம் காங்கிரஸ் அரசும் திமுகவும் அவர்களுடன் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும்தான் இதற்கு பொறுப்பெடுக்க வேண்டும். ராஜபக்சேவே சொல்லியிருக்காரு அவருக்கு மேல் வேறு யார் வந்து சொல்லவேண்டும். பிரபாகரன் வந்து சொல்ல வேண்டுமா? பிரபாகரன் இனி வரமாட்டார் என்று தெரியும். ஆனால் புலிகள் அமைப்பில் இருந்த எவ்வளவோ பேர் சொல்லியிருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் பதில் என்ன?
எப்படி இலங்கையில் ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டு அடையாளம் தெரியாமல் ஆக்கப்பட்டார்களோ அதேபோல் தமிழகத்தில் காங்கிரசை அடையாளம் தெரியாமல் ஆக்கி துடைத்தெறிவதுதான் அங்கே இறந்தவர்களுக்கு தமிழகம் செய்யும் அஞ்சலியாக இருக்கும் எனக்கூறினார்.