விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக அந்த கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் மதுரை பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களுக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகிய 3 பேரும் மதுரை சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் கடந்த 31ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றபோது செய்தியாளர்களின் கேள்விக்கு எனது ஒப்புதல் வாக்குமூலம் மிரட்டி பெறப்பட்டது.
பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி ஜாமீன் கிடைக்கவிடாமல் செய்கின்றனர். மற்ற விவரங்களை எனது வக்கீல் கூறுவார் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருதய செயல்பாட்டில் பிரச்சனை உள்ளதா என்பது குறித்து எக்மோ கருவி மூலமாக பரிசோதனை நடத்தப்பட்டது. ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பாக நிர்மலாதேவி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து இன்றும் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்மலாதேவியிடம் செய்தியாளர்கள் விசாரணை குறித்தும், உடல்நலக்குறைவு குறித்தும் கேட்டபோது பதிலளிக்க மறுத்தார்.இதுகுறித்து அவரது வழக்கறிஞர் பசும் பொன் பாண்டியனிடம் கேட்டபோது இந்தமுறை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமண்ரத்திற்க்கு வரும் போது பத்திரிக்கையாளர்களிடம் நிர்மலாதேவி வாய் திறந்து பேசியதை தொடர்ந்து அவருக்கு சிறையில் மிரட்டி பெரும் நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள் அதனால் சிறிது நெஞ்சுவலி ஏற்படவே அவரை மருத்துவமனைக்கு நடந்தே அழைத்துவந்திருக்கிறார்கள் மேலும் அவரது உயிருக்கு மீண்டும் ஆபத்து நேருமோ என்று பயமாக இருக்கிறது....என்றார்..